ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள ரொட்டிக் கடை ஒன்று, வெறும் 60 மலேசிய காசுக்கு (17 சிங்கப்பூர் காசு) ரொட்டி விற்கிறது.
ஐந்து ரொட்டிகள் அடங்கிய பொட்டலங்களாக ரொட்டிகள் விற்கப்படுகின்றன. அவற்றின் விலை 2.99 ரிங்கிட்.
ரொட்டியை வாங்குவதற்காகவே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சிலர் மணிக்கணக்கில் காத்திருக்கவும் தயாராக உள்ளனர்.
தாமான் ஜோகூர் ஜெயா பகுதியில் உள்ள ‘ஜேபி யாப் பிரதர்ஸ் ஃபுட்’ எனும் அந்த ரொட்டிக் கடையில் 12 ரொட்டிப் பொட்டலங்கள் வாங்க ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் தாம் காத்திருந்ததாக திருவாட்டி ஸுரினா ஸுபைர், 48, கூறினார்.
கடை உரிமையாளரான திரு யாப் பூன் கிம், புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் மட்டும் ரொட்டிகள் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார். அவ்விரு நாள்களில் ஒன்றுக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் 1,500 ரொட்டிகள் வரை அந்தக் கடையால் விற்க முடியும்.
சோளம், தாவர வெண்ணெய் (மார்ஜரின்), காயா-வெண்ணெய், சாக்லெட் ஆகிய சுவைகளில் விற்கப்படும் ரொட்டிகள், மூவாரில் தயாரிக்கப்படுவதாக திரு யாப் தெரிவித்தார்.
“மலிவு விலையில் உணவு ருசித்து உண்ணக்கூடிய வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஒருபுறமிருக்க, மூவாரில் உள்ள ரொட்டித் தயாரிப்பு ஆலை போன்ற பாரம்பரிய தொழில்களை ஊக்குவிப்பது எங்களது நோக்கம்,” என்று அவர் விவரித்தார்.
“2019ல் எங்கள் கடையில் ரொட்டிகளை விற்றோம். ஆனால், கொவிட்-19 காரணமாக சில மாதங்களுக்குப் பிறகு வியாபாரத்தை நிறுத்திக்கொள்ள நேரிட்டது. ரொட்டித் தயாரிப்பு ஆலை, தங்குதடையின்றி ரொட்டிகளை வழங்க இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த மாதத் தொடக்கத்தில் விற்பனையை நாங்கள் தொடர்ந்தோம்,” என்றார் திரு யாப்.
தொடர்புடைய செய்திகள்
ரொட்டி விற்பனை குறித்து கடையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, பல இனத்தவர்களும் ரொட்டி வாங்க கடைக்கு வரத் தொடங்கியதை தாம் கவனித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“வாழ்க்கைச் செலவினம் உயரும் வேளையில், மலிவு விலை உணவு வகைகளை மக்கள் நாடுவதையே இது காட்டுகிறது,” என்றார் அவர்.
தம் உடன்பிறப்புகளுடன் இணைந்து திரு யாப் அந்த ரொட்டிக் கடையை 36 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

