கியவ்: உக்ரேனின் கிழக்குப் பெருநகரான கார்கிவ், நாட்டின் முதலாவது நிலத்தடி பள்ளிக்கூடத்தைக் கட்ட உள்ளது. குண்டுகளும் ஏவுகணைகளும் அடிக்கடி வீசுப்படுவதால் அந்த அபாயங்களில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற நிலத்தடிப் பள்ளிக்கூடங்கள் கட்டப்படுவதாக கார்கிவ் நகர மேயர் இகோர் டெரெகோவ் கூறினார்.
“பதுங்கக்கூடிய இடங்களில் பள்ளிக்கூடங்கள் உருவான பின்னர் ஏவுகணை வீசப்பட்டாலும் நேரடியாக பள்ளி வகுப்புகளில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி தடையின்றித் தொடரும்,” என்று அவர் தமது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டார்.
போர் நீடிப்பதால் உக்ரேனின் பல முன்னணி வட்டாரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இணைய வகுப்புக்கு மாறிவிட்டன. இருந்தபோதிலும், கார்கிவ் நகரம் தனது மெட்ரோ ரயில் நிலையங்களில் தனித்தனியாக 60 வகுப்பறைகளை அமைத்துவிட்டது.
செப்டம்பர் 1ஆம் தேதி கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே அவை ஏற்படுத்தப்பட்டதால் நகரில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அங்கு இடம் கிடைத்தன.
உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வில் 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா படையெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு வரை 1.4 மில்லியன் பேர் வசித்தனர்.

