பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சயாம் பேரகன் கடைத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதும் நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து விரைந்து வெளியேறியதை படங்கள் காட்டின.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் 14 வயதுப் பையன் ஒருவனைக் கைதுசெய்திருப்பதாகத் தாய்லாந்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு கூறியது.
தாக்குதல் நடத்தியவன் என்று நம்பப்படும் அப்பையன், தனது தலையில் கைகளை வைத்திருந்தபடி மண்டியிட்டிருந்ததைக் கண்காணிப்புக் கருவிகள் மூலம் காணமுடிந்தது.
மற்ற படங்களில் அவன் துப்பாக்கி ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்ததுபோல் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளிலும் படங்களிலும் மக்கள் கடைத்தொகுதியின் வாயிலை நோக்கி ஓடுவதைக் காணமுடிந்தது.
குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் அவசரச் சேவைத் துறை தெரிவித்தது.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் முதலில் கீழ்த்தளத்தில் உள்ள கழிவறையிலிருந்து வந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சம்பவம் குறித்து தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறியிருக்கிறார்.