பேங்காக் கடைத்தொகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தாய்லாந்து சூளுரை

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சியாம் பேரகான் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணத்துறையில் நம்பிக்கையை மீட்டெடுக்க தாய்லாந்து அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து சுற்றுப்பயணத்துறை ஆணையத்தின் ஆளுநரான தப்பானி கியாட்பாய்புல், நம்பிக்கையை பழைய நிலைக்குக் கொண்டுவர அரசாங்க அமைப்புகள் மேலும் முயற்சி செய்யும் என்று சொன்னார்.

“உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்காக அனைத்து இடங்களிலும் நாங்கள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். ஆனால், எடுக்கப்படும் நடவடிக்கைகளை அவர் குறிப்பிடவில்லை.

ஆகஸ்ட்டில் தாய்லாந்துப் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்ட திரு ஸ்ரேத்தா தவிசின் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், சுற்றுப்பயணிகளுக்காக தமது அரசாங்கம் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

கடைத்தொகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு ‘தனிப்பட்டதொரு சம்பவம்’ என சுற்றுப்பயணத்துறை அமைச்சர் சுதாவன் வாங்சுபாகிச்கொசோல் வலியுறுத்தினார்.

எனினும், கடைத்தொகுதிகளிலும் இதர சுற்றுலாத் தலங்களிலும் ஆயுதப் பரிசோதனையை சட்ட அமலாக்க அமைப்புகள் கடுமையாக்கும் என்றார் அவர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் மன ரீதியாக பாதிக்கப்பட்டான்: காவல்துறை

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தி வெளிநாட்டவர் இருவரைச் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பதின்மவயது துப்பாக்கிக்காரன், மன ரீதியாக அவதியுற்றதாகக் காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.

தோட்டாவை வெளியேற்றாத கைத்துப்பாக்கியை அவன் மாற்றியமைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் துப்பாக்கிக்காரனுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் துப்பாக்கிச்சூடு நடந்த தினத்தன்று அவன் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்ளவில்லை என்றும் காவல்துறை கூறியது.

அந்த 14 வயதுச் சிறுவனின் பின்னணி குறித்து ஆராயவிருக்கும் விசாரணை அதிகாரிகள், இணைய விளையாட்டாளர்களான அவனுடைய நண்பர்களிடமும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய காவல்துறைத் தலைவர் தோர்சாக் சுக்விமோல் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 34 வயது சீன நாட்டவரும் கடைத்தொகுதியில் பணியாற்றிய மியன்மார் நாட்டவரும் ஆவர். துப்பாக்கிக்காரன் ஒருவனை உயிருடன் கைது செய்வது வழக்கத்திற்கு மாறானது என்றார் திரு தோர்சாக்.

“சந்தேக நபரிடம் இதற்கு முன்னதாக வன்முறையில் ஈடுபடக்கூடிய, மூர்க்கத்தனமான நடத்தை இருந்ததா என்பது குறித்து நாங்கள் விசாரிக்க வேண்டும்,” என்றார் அவர்.

“தொடக்கத்தில் நான் பேசியபோது அவரை அமைதியடையச் சொன்னேன். யாரோ ஒருவர் தம்மிடம் பேசுவதைப்போல அவனுக்குத் தெரிந்தது. துப்பாக்கிச்சூடு நடத்துமாறு குரல் கேட்டதாக அவன் சொன்னான்,” என்றும் திரு தோர்சாக் கூறினார்.

பெற்றோருடன் வசிக்கும் அச்சிறுவனின் வீட்டு அறையைச் சோதித்த காவல்துறையினர், ஒரு துப்பாக்கி, 9 மி.மீ. நீளமுடைய 49 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன.

அச்சிறுவன் துப்பாக்கி பயன்படுத்துவதைக் காட்டும் காணொளிகள் அவனது கைப்பேசியில் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

சிங்கப்பூரர்களுக்கு அமைச்சு அறிவுறுத்தல்

இந்நிலையில், பேங்காக்கில் உள்ள சிங்கப்பூரர்கள் கவனமாக இருக்கும்படி வெளியுறவு அமைச்சு புதன்கிழமை அறிவுறுத்தியது.

துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரர் எவரும் காயம் அடைந்துள்ளாரா அல்லது பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய, பேங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

“துப்பாக்கிச்சூட்டால் சிங்கப்பூரர் எவரும் பாதிக்கப்பட்டதாக தற்போது தகவல் எதுவும் இல்லை. பேங்காக்கில் உள்ள சிங்கப்பூரர்கள் உள்ளூர் செய்திகளைக் கண்காணித்து, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,” என்று அமைச்சு கூறியது.

தாய்லாந்து செல்லும் சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சுடன் மின்பதிவு செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!