தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க நிதி நெருக்கடி சீனாவுக்கு சாதகமாக அமையலாம்

1 mins read
f9d86570-9d03-4f27-9192-9c141cf89fa4
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (நடுவே). - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கம் முடங்கிப்போவதைத் தவிர்ப்பதற்கான 45 நாள் இடைக்கால நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் அமெரிக்காவால் உத்திபூர்வ காரணங்களுக்காக பசிபிக் வட்டாரத் தீவுகளுக்குப் போதுமான நிதியுதவி வழங்க முடியாமல் போகலாம். இதையடுத்து பசிபிக் நாடுகளுக்கு சீனா உதவிக்கரம் நீட்டக்கூடும் என்றும் அது அமெரிக்காவுக்கும் அதன் பாங்காளிகளுக்கும் பாதகமாக அமையலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கவனிப்பாளர்களும் முன்னாள் அதிகாரிகளும் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனீசியா, மார்ஷல் தீவுகள், பலாவ் ஆகிய பகுதிகளுக்கான 20 ஆண்டு நிதியுதவித் திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஒப்புதல் வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருந்தது.

வட பசிபிக்கில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. அதனால் பல ஆண்டுகளாக சரியாக கவனிக்கப்படாத அந்த மூன்று பகுதிகளும் இப்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூசலில் சிக்கியுள்ளன.

மைக்ரோனீசியா, மார்ஷல் தீவுகள், பலாவ் ஆகியவற்றுக்கான நிதியுதவித் திட்டங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைந்தன. 7.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள 20 ஆண்டு புதிய நிதியுதவித் திட்டத்தை வரைய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்பட்டது.

எனினும், அமெரிக்க அரசாங்கம் முடங்காமல் பார்த்துக்கொள்வதற்கான இடைக்காலத் திட்டத்தின்கீழ் அந்த நிதியுதவித் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்