பெய்ஜிங் - சீனா தனது விண்வெளி நிலையத்தை விரிவாக்குகிறது. நாசாவின் அனைத்துலக விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் முடியவிருக்கும் நிலையில், உலக நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு அருகே பயணங்களை மேற்கொள்ள ஒரு மாற்று வசதியாக இது அமையும்.
மூன்று தொகுதிகளாக உள்ள தனது விண்வெளி நிலையத்தை சீனா வருங்காலத்தில் ஆறு தொகுதிகளாக விரிவுபடுத்தவிருக்கிறது.
சீனாவின் விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டு ஆயுட்காலம், 15 ஆண்டுகள் என்று சீனாவின் முக்கிய விண்வெளி ஒப்பந்த நிறுவனமான சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி புதன்கிழமையன்று தெரிவித்தது.
டியாங்காங் என்று அழைக்கப்படும் சீனாவின் அந்த விண்வெளி நிலையம், 2022 ஆண்டிலிருந்து முழுமையாகச் செயல்பட்டுவருகின்றது. இதுவரை, மூன்று விண்வெளி வீரர்கள் 450 கி.மீட்டர் உயரச் சுற்றளவுப் பாதையில் அந்த நிலையத்தில் இருந்தபடி ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்துவரும் நாசாவின் அனைத்துலக விண்வெளி நிலையத்தின் சேவை 2030ல் நிறுத்தப்படவிருக்கின்றது. அதே காலக்கட்டத்துக்குள்ளாக விண்வெளியில் மாபெரும் சக்தியாக உருமாறுவதே சீனாவின் இலக்கு.

