தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பேங்காக் கடைத்தொகுதி துப்பாக்கிச்சூடு

வாடிக்கையாளர்களின் உயிர்காத்த ஊழியர்களின் துணிகரச் செயலுக்குப் பாராட்டு

2 mins read
48671ae4-80f2-4ea2-b8ee-3252a38e8362
பேங்காக்கில் உள்ள சியாம் பேரகான் கடைத்தொகுதில் இருந்து வெளியேற்றப்படும் வாடிக்கையாளர்கள். - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை 14 வயதுச் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அங்கு சிக்கிக்கொண்ட வாடிக்கையாளர்கள், தங்களது உயிரைக் காத்த ஊழியர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்; ஐவர் காயமுற்றனர். கடைத்தொகுதி முழுவதும் துப்பாக்கிச் சத்தம் கேட்க, வெளிநாட்டுப் பயணிகளும் ஊழியர்களும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பியவர்கள், வாடிக்கையாளர்களைக் காக்க உடனடியாகச் செயல்பட்ட ஊழியர்களைப் பாராட்டியுள்ளனர்.

“ஐஸ்கிரீம் வாங்க நாங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அப்போது அங்கிருந்த கடை ஊழியர் ஒருவர் எனது மற்றும் என் சகோதரரின் கைகளைப் பிடித்துக்கொண்டு மெக்டோனல்ட்ஸ் கடையிலிருந்து ஓட்டம் பிடித்தார்.

“நான் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுகொண்டிருந்தேன். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். எங்களைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி,” என்று வாடிக்கையாளர் ஒருவர் கூறினார்.

சீன சுற்றுப்பயணியான யின் குவான்ஸி, துப்பாக்கிச்சூட்டின்போது தம் நண்பர்களுடன் கடைத்தொகுதியில் தாம் ஒளிந்துகொண்டதை நினைவுகூர்ந்தார்.

“தாய்லாந்துக்கு வந்தது இதுதான் எனக்கு முதல்முறை. கடைத்தொகுதியின் நான்காவது தளத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் நான் ஒளிந்திருந்தேன். பின்னர் காவல்துறையினர் எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

“அவர்களுடன் சேர்ந்து ஒளிந்துகொள்ள என்னை அனுமதித்த கித்தார் கடை ஊழியர்களுக்கு நான்றி கூற விரும்புகிறேன்,” என்றார் அவர்.

துப்பாக்கிக்காரன் அருகில் இருந்தபோதும், பாதுகாவல் ஊழியர்கள் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் பக்கம் வருமாறு அழைப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அவை இணையத்தில் வேகமாகப் பரவின.

துணிச்சலாகவும் வேகமாகவும் செயல்பட்டு உயிர்களைக் காத்த கடைத்தொகுதி பணியாளர்களை இணையவாசிகள் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்