ஹாங்காங்: வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக உட்புறங்களில் இருக்குமாறு மக்களிடம் ஹாங்காங் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளும் பங்குச்சந்தையும் திங்கட்கிழமை மூடப்பட்டன.
கொய்னு புயல் வலுவிழந்தாலும் காற்றும் கனமழையும் தொடர்வதாக ஹாங்காங்கின் வானிலை ஆய்வு நிலையம் கூறியது.
மலைகள் சூழ்ந்த ஹாங்காங்கின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அது குறிப்பிட்டது.
விமானச் சேவைகளுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்ட நிலையில், ஹாங்காங் விமான நிலையத்திலும் நிலத்தடி ரயில் நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்ததாக ஆர்டிஎச்கே செய்தி நிறுவனம் தெரிவித்தது.

