தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல்: காஸா எல்லை எங்கள் கட்டுப்பாட்டில்

2 mins read
3f0f3cb5-78ee-454a-8705-95599352122e
திங்கட்கிழமையன்று காஸா நகர் மீது இஸ்ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதலின்போது பதிவான படம். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

டெல் அவிவ்: காஸா எல்லையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சென்ற வார இறுதியில் ஹமாஸ் அமைப்பினர் அப்பகுதியை ஊடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் இவ்வாறு அறிவித்துள்ளது. தெற்கு இஸ்ரேல் மீது யாரும் எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து திங்கட்கிழமை இரவு இஸ்ரேல், காஸா பகுதி மீது தொடர்ந்து ஆகாயப் படைத் தாக்குதல்களை நடத்தியது.

எச்சரிக்கை ஏதுமின்றி ஒவ்வொரு பாலஸ்தீனர் வீட்டின் மீது இஸ்ரேல் வீசும் வெடிகுண்டு விழும்போதும் தாங்கள் பிணைபிடித்துள்ள இஸ்ரேலியர்களில் ஒருவர் கொல்லப்படுவார் என்று ஹமாஸ் அமைப்பு முன்னதாக எச்சரித்தது. திங்கட்கிழமை வரலாறு காணாத அளவில் 300,000 தேசிய சேவையாளர்களை இஸ்ரேலிய ராணுவம் பணியில் ஈடுபடுத்தியதையொட்டி ஹமாஸ் அவ்வாறு கூறியது.

அத்தகைய நடவடிக்கைகளால் சனிக்கிழமையன்று ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் நிலம்வழி பதிலடி கொடுக்கும் என்ற அச்சம் நிலவியது. இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களில் இதுவரை குறைந்தது 1,500 பேர் மாண்டுவிட்டனர்.

சனிக்கிழமையன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தது 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததாகவும் 2,600 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒளிவழிகள் தெரிவித்தன. இஸ்ரேல் மேற்கொண்ட ஆகாயப் படைத் தாக்குதல்களில் குறைந்தது 687 பாலஸ்தீனர்கள் மாண்டதாகவும் 3,726 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சு சொன்னது.

அனைத்துலக நாடுகள் பல இஸ்ரேலுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சண்டையை நிறுத்தி பொதுமக்களைப் பாதுகாக்குமாறு பலர் குரல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, காஸா பகுதி மீது நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனர்கள் எகிப்துக்குச் செல்லலாம் என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் ஒருவர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அந்த எல்லைப் பகுதி தற்போது மூடியிருப்பதாக அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தெற்கு காஸாவுக்கும் எகிப்துக்கும் இடையே உள்ள ராஃபா எல்லைப் பகுதிவழி தப்பித்துச் செல்லும் பாலஸ்தீன அகதிகளுக்குத் தான் அறிவுரை வழங்குவதாக லெஃப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதற்குப் பிறகு முன்னதாகத் திறந்திருந்த ராஃபா எல்லை பின்னர் மூடப்பட்டதாக அவரின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

காஸா மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ராஃபா எல்லையில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக எகிப்துத் தரப்பிலிருந்தும் சம்பவங்களை நேரில் கண்ட ஒருவரிடமிருந்தும் திங்கட்கிழமையன்று தகவல் வந்தது.

குறிப்புச் சொற்கள்