104 வயதில் ‘ஸ்கைடைவிங்’ சாகசம் செய்தவர் மரணம்

1 mins read
92440d2a-8824-4620-b406-a96d1ea337d0
104 வயதில் ‘ஸ்கைடைவிங்’ சாகசம் செய்து அனைத்துலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தார் திருவாட்டி டோரத்தி ஹொஃப்னர். - படம்: இன்ஸ்டகிரா/ஸ்கைடைவ் சிக்காகோ

சிக்காகோ: ‘ஸ்கைடைவிங்’ சாகசம் செய்து அனைத்துலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்த 104 வயது மூதாட்டி ஒருவர், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள தமது வீட்டில் தூக்கத்தின்போது உயிரிழந்தார்.

திருவாட்டி டோரத்தி ஹொஃப்னரின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று திரு ஜோ கோனண்ட் செவ்வாய்க்கிழமை கூறினார்.

திருவாட்டி ஹொஃப்னரை திரு கோனண்ட்டுக்கு ஐந்து ஆண்டுகளாகத் தெரியும். திரு கோனண்ட்டை தம் பேரன் என்று திருவாட்டி ஹொஃப்னர் அழைப்பார்.

1918 டிசம்பர் 17ஆம் தேதி பிறந்த திருவாட்டி ஹொஃப்னரின் வாழ்க்கை கடந்த வாரம் மாறியது. அக்டோபர் 1ஆம் தேதி வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். முதிய வயதிலும் அன்றைய தினம் விமானத்திலிருந்து குதித்து ‘ஸ்கைடைவிங்’ சாகசத்தில் அவர் இறங்கினார்.

ஆனால், முதல்முறையாக அவர் சாகசத்தில் ஈடுபட்டது 100வது வயதில்தான். அதை ரசனையான அனுபவம் என்று கடந்த வாரம் திருவாட்டி ஹொஃப்னர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை திருவாட்டி ஹொஃப்னர் இறப்பதற்கு முன்னர் திரு கோனண்ட்டை அவர் கட்டியணைத்துக்கொண்டார்.

“என் அன்பு பேரனே, இரவு வேளை உணவுக்குப் பிறகு சந்திப்போம்,” என்று அவர் குறிப்பிட்டதாக திரு கோனண்ட் பகிர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்