இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை மோதல் நீடித்தது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியை தாக்கி இஸ்ரேல் கணிசமான அளவுக்கு கட்டடங்களை இடித்து நொறுக்கிவிட்டது.
மீட்புப் படையினர் பல இடங்களுக்குச் சென்று சேர முடியவில்லை என்று காஸாவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் சில மணி நேரங்களில் காஸா பகுதியில் மின்சாரம் நின்றுவிடும் என்று புதன்கிழமை பிற்பகல் நேரத்தில் அதிகாரிகள் அபாயச் சங்கு ஊதினார்கள்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இரு தரப்பிலும் குறைந்தபட்சம் 2,200 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
ஹமாஸ் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 இஸ்ரேலியர்கள் மாண்டதாகவும் அதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் அந்தப் போர் இப்போதைக்கு முடியும் என்று தெரியவில்லை.
இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. பள்ளிக்கூடங்களிலும் மருத்துவமனைகளிலும் காஸா மக்கள் ஓடி பதுங்குகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, காஸா அருகே ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி அதிரடித் தாக்குதல் தொடங்கவிருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை மேலும் மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா தரப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குப் பதிலடியாக லெபனானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், இந்த விவகாரம் பற்றி கருத்து கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய கொடூரம் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய படுமோசமான சம்பவங்களை நினைவுகூர்கிறது என்று தெரிவித்தார். இது பயங்கரவாதச் செயல் என்றார் அவர்.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா தரப்புக்கும் இடையில் கைகலப்பை வைத்துப் பார்க்கையில், இந்த விவகாரம் வட்டாரப் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடிய ஆபத்தும் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகள் சனிக்கிழமையன்று திடீர் தாக்குதல் நடத்தி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமான மக்களை படுகொலை செய்துவிட்டார்கள். பலரையும் பிடித்துச் சென்றுவிட்டார்கள்.
இதையடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் சூளுரைத்து காஸா பகுதியைத் தரைமட்டமாக்கி வருகிறது.
தான் நடத்திய தாக்குதலில் காஸாவில் 260 சிறார்கள், 230 மாதர்கள் உள்ளிட்ட 1,055 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
ஹமாஸ் இயக்கமும் இதர தீவிரவாத அமைப்புகளும் 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைக் கடத்திச் சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடியாக தான் கடத்தி வைத்திருப்போரில் ஒவ்வொருவராக கொன்றுவிடப்போவதாக ஹமாஸ் மிரட்டி இருக்கிறது.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பயந்து 200,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு ஓடி இருக்கிறார்கள்.
இஸ்ரேலும் எகிப்தும் எல்லைகளைத் தடுத்து இருப்பதால் அவர்கள் காஸா பகுதியைவிட்டு வெளியேற முடியவில்லை.
காஸாவுக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி இருக்கிறது.
எகிப்தில் இருந்து காஸாவிற்கு அந்தப் பொருள்கள் வரவிருந்த வழியும் மூடப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

