இஸ்ரேல்-ஹமாஸ் போரிலிருந்து பாடம்கற்றுக் கொள்ள விரும்பும் தைவான்

இஸ்ரேல்-ஹமாஸ் போரிலிருந்து பாடம்கற்றுக் கொள்ள விரும்பும் தைவான்

2 mins read
33c09023-783c-471a-83f4-83f4883646ba
இஸ்ரேல்-ஹமாஸ் போரை கண்காணிக்க விரும்புவதாக தைவான் தற்காப்பு அமைச்சர் சியூ குவோ செங் தெரிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

தைப்பே: இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் எப்படி ரகசியமாக திட்டமிட்டது என பல நாடுகள் வியப்படைந்துள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரிலிருந்து சில பாடங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவதாக தைவான் தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து ராணுவ அச்சுறுத்தல்களை அடிக்கடி எதிர் கொள்ளும் தைவான், இஸ்ரேல்-ஹமாஸ் போரை ஆராய்வதற்காக பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

போரைத் தவிர்ப்பதற்கு உளவுத்துறையின் பணி மிக முக்கியம் என்று தைவான் நாட்டின் தற்காப்பு அமைச்சரான சியூ குவோ-செங் தெரிவித்துள்ளார்.

தைவானை சொந்தம் கொண்டாடும் சீனா, அந்நாட்டுக்கு ராணுவ, அரசியல் ரீதியாக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தைவானுக்கு அருகே மிகப்பெரிய அளவில் இரு போர்ப் பயிற்சிகளையும் அது நடத்தியிருக்கிறது.

சீனாவிலிருந்து தைவான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றில் ஒன்று, தைவானை ஆக்கிரமிக்க சீனா தைவான் நீரிணையை கடந்தாக வேண்டும்.

பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுடனான இஸ்ரேல் பிரச்சினையிலிருந்து தைவான் என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சியூவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த அவர், இதன் தொடர்பில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டு போர் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

முதல் பாடமாக உளவுத் துறையின் பங்கு மிக முக்கியம் என்பதை அறிந்துகொண்டோம். உளவுத் துறையின் தகவலால் பல எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும். போரையும் தடுக்க முடியும் என்று திரு சியூ தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை போரின் பயங்கரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்