கோலாலம்பூர்: மலிவுக் கட்டண விமான நிறுவனமான ‘மைஏர்லைன்’ அதன் செயல்பாடுகளை திடீரென நிறுத்திக்கொண்டதை அடுத்து, கோலாலம்பூர் விமான நிலைய முனையத்தில் வியாழக்கிழமை காலை பயணிகள் பலர் சிக்கித் தவித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் விமானச் சேவையைத் தொடங்கிய மைஏர்லைன், வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு ஃபேஸ்புக்கிலும் பின்னர் மற்ற சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்ட பதிவுகளில், குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடி காரணமாக அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டது.
பேங்காக், குச்சிங், பினாங்கு உள்ளிட்ட பல்வேறு நகர்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள வியாழக்கிழமை காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் மலிவுக் கட்டண முனையத்துக்குச் சென்ற பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பயணப் பெட்டிகளைப் பதிவுசெய்யும் முகப்புகளில் பயணிகள் நிற்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வந்தன.
விமான நிலையத்திற்கு வந்த பிறகே விமானப் பயணம் ரத்து செய்யப்பட்ட செய்தியை தாங்கள் அறிந்ததாக பயணிகள் பலரும் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.
செயல்படாத முகப்புகளுக்கு பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்ததாக பயனர் ஒருவர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
மைஏர்லைன் நிறுவனத்தை அல்லது மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்தைத் தொடர்புகொள்ளுமாறு விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானச் சேவைகள் வழங்கப்படுவது குறித்த கலந்துரையாடலும் இணையத்தில் இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளிடம் விமானப் பயணக் கட்டணத்தைத் திரும்பத் தருவது குறித்து மைஏர்லைன் தகவல் எதுவும் வெளியிடவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குக் கட்டணத்தைத் திரும்பத் தருவதற்கு அந்நிறுவனத்திற்குப் பொறுப்பு இருப்பதாக மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.