காஸா வடக்குப் பகுதி மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டளை

காஸா வடக்குப் பகுதி மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டளை

3 mins read
303a8d28-14cd-41cf-b11f-1d9d1a8c3030
காஸாவில் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேல் குண்டு வீசித் தாக்கியதால் ஏற்பட்ட குழி. - படம்; நியூயார்க் டைம்ஸ் 

நியூயார்க்: காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெற்குப் பகுதிக்குப் போய்விட வேண்டும் என்று இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு விடுத்தது.

ஹமாஸ் தீவிரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது அதி பயங்கர தாக்குதல் நடத்தியதை அடுத்து அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா பகுதிக்குள் புகுந்து அந்தப் பகுதியைத் தரைமட்டமாக்கப்போகிறது.

அதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான் ஐநாவிடம் இஸ்ரேல் அவ்வாறு தெரிவித்து இருக்கிறது என்று பாலஸ்தீனர்கள் அஞ்சுகிறார்கள்.

காஸா எல்லையில் கவச வாகனங்களை இஸ்ரேலிய ராணுவம் குவித்து வருகிறது. இப்போது போருக்கு காலம் கனிந்துவிட்டது இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் காலன்ட் வியாழக்கிழமை அறிவித்தார்.

அதேவேளையில், இஸ்ரேலிய போர் வாகனங்கள் காஸா பகுதியை குண்டு போட்டு தரைமட்டமாக்கின.

அடுத்த சில நாள்களில் கணிசமான அளவுக்கு காஸா சிட்டியில் ராணுவ நடவடிக்கை இடம்பெறும் என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது.

இதனிடையே, காஸாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் 24 மணி நேரத்திற்குள் தெற்கே போய்விட வேண்டும் என்று இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த பொதுத் தொடர்பு அதிகாரிகள் காஸாவில் உள்ள ஐநா அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

ஐநா பேச்சாளர் ஸ்டீபன்டூ டுஜார்ரிக் நியூயார்க்கில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் முன்னதாக இதைத் தெரிவித்தார்.

ஐநா அலுவலர்கள், பள்ளிக்கூடங்கள், சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட ஐநா நிலையங்களில் தஞ்சம் புகுந்து இருப்போர் அனைவரும் காஸா பகுதியின் வடக்கில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்து இருப்பதாக திரு டுஜார்ரிக் கூறினார்.

காஸா பகுதியில் 2.3 மில்லியன் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் ஏறக்குறைய 1.1 மில்லியன் பேர் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

வடக்கில்தான் காஸா சிட்டி இருக்கிறது. அதுதான் காஸா பகுதியின் ஆகப் பெரிய நகராக உள்ளது என்று அறிக்கை கூறியது.

மக்கள் ஒரே நாளில் அப்படி இடமாறுவது இலேசான ஒன்றல்ல. படுமோசமான மனிதாபிமான தொடர்விளைவுகள் இல்லாமல் அது சாத்தியமில்லை என்றே ஐநா கருதுவதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இஸ்ரேல் எச்சரிக்கை தொடர்பில் ஐநா தெரிவித்து இருக்கும் கருத்து பற்றி தெரிவித்த ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், இஸ்ரேலின் முன் எச்சரிக்கை தொடர்பில் ஐநா செயல்பட்ட விதம் அவமானமானது என்றார்.

அதற்குப் பதிலாக ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தை ஐநா கண்டித்து இருக்க வேண்டும். தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உள்ள உரிமையை ஐநா ஆதரிக்க வேண்டும் என்று தூதர் கூறினார்.

இதனிடையே, இஸ்ரேலின் எச்சரிக்கை பற்றி கருத்து கூறிய ஹமாஸ் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தலைவரான சலாமா மரூஃப், வடக்கு காஸா மக்கள் வெளியேறிவிட வேண்டும் என்று இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை, அதனுடைய போலி பிரசாரத் தந்திரம் என்றார்.

அந்தத் தந்திரம், காஸா குடிமக்களைக் குழப்பிவிடும் வேலை என்றும் ஹமாஸ் அமைப்பின் அனைத்துலக பிணைப்பை அறுத்துவிடும் வேலை என்றும் திரு சலாமா மரூஃப் தெரிவித்தார். காஸா மக்கள் யாரும் இடம் பெயர வேண்டாம் என்றார் அவர்.

இஸ்ரேலுக்குள் புகுந்து 150 பேரை ஹமாஸ் பிடித்துச் சென்றுள்ளது. அவர்களை விடுவிக்கும் வரை காஸா முற்றுகை தொடரும் என்று இஸ்ரேல் முன்னதாக தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்