வெளியேறும் பாலஸ்தீனர்கள்; அடுத்த தாக்குதலுக்குத் தயார் என்கிறது இஸ்ரேல்

2 mins read
617e1ff1-50fa-42e2-bf5d-2d66eaa92cfd
வடக்கு காஸாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறிவிட வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கணிசமான பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளைவிட்டு தெற்கு காஸா நோக்கிச் செல்வதாக இஸ்ரேல் தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

வடக்கு காஸா மக்கள் தெற்குப் பகுதிக்குச் சென்றுவிட வேண்டும் என்று தான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கணிசமான மக்கள் தெற்கே செல்வதாகவும் அடுத்த கட்ட தாக்குதலைத் தொடங்க தான் தயாராகிவிட்டதாகவும் இஸ்ரேல் சனிக்கிழமை பிரகடனம் செய்தது.

ஹமாஸ் இயக்கத்தினர் ஒரு வாரம் முன்னதாக இஸ்ரேலுக்குள் புகுந்து அதிபயங்கர தாக்குதலை நடத்தி 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களைக் கொன்று சுமார் 150 பேரை பிடித்துச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதை அடுத்து காஸாவில் இருந்து ஹமாஸ் இயக்கத்தைத் துடைத்து ஒழிக்க சவால் விட்டு அதிரடி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திவருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 1,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இஸ்ரேல் காஸாவில் நடத்திய தாக்குதலில் 2,215 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான மக்கள் காயமடைந்தனர். மேற்குக் கரையில் 54 பேர் மாண்டனர் என்று சனிக்கிழமை தகவல்கள் தெரிவித்தன.

காஸாவை முடக்கி இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவதால் பாலஸ்தீனர்கள் உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தவிப்பதாக ஐநா அபாயச் சங்கு ஊதி இருக்கிறது.

அதேவேளையில், இனிமேல் தான் முழு மூச்சாகத் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று இஸ்ரேல் மேலும் மிரட்டி இருக்கிறது.

இந்நிலையில், காஸாவில் ஏற்பட்டு உள்ள மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் மத்திய கிழக்கு வட்டார அரசாங்கங்களுடன் தான் கலந்து ஆலோசித்து வருவதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.

மில்லியன்கணக்கான மக்கள் ஒரே நாளில் இடம்பெயரும் வேண்டும் என்பது சாத்தியமற்றது. அதனால் பெரிய அளவிலான மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஏற்கெனவே பாலஸ்தீனர்கள் அடிப்படை வசதியில்லாமல் தவிப்பதாகவும் அது கூறியுள்ளது.

வடக்கு காஸா பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெற்கு நோக்கி ஓடிவிட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை இஸ்ரேல் எச்சரித்தது.

அந்த எச்சரிக்கைக்குப் பிறகு பாலஸ்தீன குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு நோக்கிச் செல்வதாக சனிக்கிழமை இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் லெஃடினன்ட் கர்னல் ஜோனார்த்தன் கோன்ரிகஸ் கூறினார்.

இவ்வேளையில், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் ஹமாஸ் அமைப்புடன் சேர்ந்துகொள்ளத் தான் தயாராகிவிட்டதாக ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதனிடையே, ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் நடத்திய அதிபயங்கர தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் இரண்டு தளபதிகளைத் தான் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.

ஹமாஸ் ஆகாயத் தாக்குதல் படைக்குத் தலைவராக இருந்த மிராட் அபு மிராட் என்பவரையும் அதிரடிப் படைப் பிரிவு ஒன்றின் தளபதியாக இருந்த அலி குவாடி என்பவரையும் தீர்த்துக்கட்டிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

குறிப்புச் சொற்கள்