தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதுகாப்பு நாடி ராஃபா எல்லைக்குச் செல்ல அமெரிக்கர்களுக்கு வலியுறுத்து

2 mins read
a00e95c1-b6ad-40e2-9f5b-a8f886afb163
ராஃபா எல்லைக்கு வெளியே அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலஸ்தீனிய அமெரிக்கர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

ரியாத்: காஸாவில் உள்ள தனது குடிமக்கள் எகிப்தின் அருகே உள்ள ராஃபா எல்லை நோக்கிச் செல்லுமாறு அமெரிக்க அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.

ராஃபா எல்லையை சில மணி நேரங்களுக்குத் திறப்பது தொடர்பாகவும் அங்கு எல்லை கடக்க பாலஸ்தீனிய அமெரிக்கர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் எகிப்து, இஸ்ரேல் மற்றும் கத்தாருடன் வாஷிங்டன் இணைந்து பணியாற்றி வருவதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் தற்போது அமெரிக்கத் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிலிங்கனுடன் பயணத்தில் உள்ளார்.

இருப்பினும், காஸாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், அமெரிக்கர்கள் எல்லை கடந்து செல்ல அனுமதிக்குமா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல இதுவரை எந்த ஓர் அமெரிக்கராவது எல்லை கடந்து வெளியேறினாரா என்பது பற்றிய தகவலும் இல்லை என்றார் அவர்.

இது தொடர்பாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறுகையில், “ராஃபா எல்லைக்குச் செல்வது பாதுகாப்பானது என்று கருதும், எங்களுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்களை அவ்வாறு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளோம்,” என்றார்.

மேலும் அவர், “முன்கூட்டியே அந்த எல்லையை நோக்கிச் செல்லத் தொடங்குவதே பொறுத்தமானது. காரணம் ராஃபா எல்லை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கே திறக்கப்படும். குறுகிய நேரத்தில் காஸாவிலிருந்து புறப்பட்டு அவசரமாக அங்கு செல்வதைக் காட்டிலும் முன்கூட்டியே நகர்வது சிறப்பு,” என்று தெரிவித்தார்.

பாலஸ்தீனிய காஸாவில் உள்ள 2.3 மில்லியன் மக்கள்தொகையில் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலஸ்தீனிய அமெரிக்கர்கள் 500 முதல் 600 பேர் வரை இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

அவர்கள் எல்லாரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வாஷிங்டன் எதிர்பார்க்கிறது.

முன்னதாக, சனிக்கிழமை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடமும் பாலஸ்தீனிய அதிகாரத்துவத் தலைவர் மஹமுத் அப்பாஸிடமும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வழி உரையாடினார்.

பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அப்போது அவர்களிடம் திரு பைடன் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்