பிரஸ்ஸல்ஸ்: காஸாவுக்கான மனிதநேய உதவியை ஐரோப்பிய ஒன்றியம் மும்மடங்காக்கியுள்ளது.
அது 75 மில்லியன் யூரோவை உதவித்தொகையாக வழங்கும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் தெரிவித்தார்.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவிற்கான உதவி குறித்து அக்டோபர் 14ஆம் தேதி அவர் அறிவித்தார்.
பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிடும் இஸ்ரேல், முன்னதாக காஸாவின் வடக்குப் பகுதியிலிருக்கும் 1.1 மில்லியன் பேரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உதவி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த உதவி காஸா எல்லையில் உதவி தேவைப்படுவோரைச் சென்றடைவதை உறுதிசெய்ய, ஐக்கிய நாட்டு நிறுவனத்துடன் (ஐநா) அணுக்கமாக ஒத்துழைப்போம்,” என்று திருவாட்டி வோன் டெர் லேயன் கூறினார்.
அதற்குமுன் ஐநாவின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸிடம் அவர் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை 294 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகைக்கு ஐநா அழைப்பு விடுத்திருந்தது. மேற்குக் கரையிலும் காஸாவிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இந்தத் தொகை உதவும்.
“ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை, அனைத்துலக மனிதநேயச் சட்டத்திற்கு இணங்க ஐரோப்பிய ஆணையம் முழுமையாக ஆதரிக்கிறது. அதேநேரம், காசாவில் உள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு ஆதரவு தருவதை உறுதிசெய்யவும் கடுமையாக உழைக்கிறோம்,” என்றார் திருவாட்டி வோன் டெர் லேயன்.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 1.300க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் பிணை பிடிக்கப்பட்டனர்.
இஸ்ரேலின் பதிலடியில் காஸாவில் இருந்த 2,200க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மாண்டனர். அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள். மாண்டோரில் 724 குழந்தைகளும் அடங்குவர்.

