$27.4 பில்லியன் மதிப்பிலான பாலம் கட்டத் திட்டமிடும் தாய்லாந்து

1 mins read
adda5b68-0920-4b2d-adf7-ccd3d4a7ecb5
புதிய பாலம் அமைக்கும் திட்டத்தின்கீழ் 280,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தாய்லாந்துப் பிரதமர் கூறினார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் மிகப் பெரிய நிலப் பாலத்தை அமைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் அனைத்துலக வர்த்தகத்திற்கும் உதவக்கூடிய இப்பாலத்தின் கட்டுமானத்திற்கு ஒரு டிரில்லியன் பாட் ($27.44 பில்லியன்) முதலீடு செய்யப்படும்.

தாய்லாந்துப் பிரதமர் ஸ்‌ரேத்தா தவிசின், செவ்வாய்க்கிழமை (அக். 17) இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கான ஏலக்குத்தகையும் கட்டுமானமும் 2025ஆம் ஆண்டு தொடங்கும்.

இதன்மூலம் 280,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாலம், நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஆண்டுக்கு 5.5 விழுக்காடு உயர்த்த உதவும் என்று கருதப்படுகிறது.

இந்தியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கிடையே சரக்குப் போக்குவரத்திற்கும் அவை தொடர்பான தளவாட நடவடிக்கைகளுக்கும் இது முக்கியமாக உதவும் என்று பிரதமர் ஸ்‌ரேத்தா தவிசின் கூறினார்.

போக்குவரத்துக்கான நேரம், செலவு ஆகியவற்றை குறைக்கவும் மலாக்கா நீரிணையில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்க்கவும் இந்தப் பாலம் உதவும் என்று தாய்லாந்து அரசாங்கம் குறிப்பிட்டது.

2030ஆம் ஆண்டு இத்திட்டத்தின் முதற்கட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்