காஸா வெளியேற்ற உத்தரவு அனைத்துலகச் சட்டத்தை மீறும் செயல்: ஐநா

ஜெனீவா: ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐநா) மனித உரிமைகள் பிரிவு, காஸா தொடர்பான இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்துலகச் சட்டத்துக்குப் புறம்பானவையாகக் கருதப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

காஸாவை முற்றுகையிடும் இஸ்‌ரேலிய ராணுவத்தின் நடவடிக்கையும் காஸாவின் வடபகுதி மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டதும் பொதுமக்களைக் கட்டாயமாக வெளியேற்றியதாகக் கருதப்படும் என்று அது குறிப்பிட்டது.

அத்தகைய கட்டாய வெளியேற்றம் அனைத்துலகச் சட்டத்தை மீறியதாக அமையும்.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநா மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ரவினா ஷம்டசானி அவ்வாறு கூறினார்.

காஸாவின் வடபகுதியிலிருந்து தற்காலிகமாக வெளியேறிய பொதுமக்களுக்கு முறையான தங்குமிடம், சுகாதாரம், பாதுகாப்பு, ஊட்டச்சத்து தொடர்பான ஆதரவை வழங்க இஸ்‌ரேல் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதை அவர் சுட்டினார்.

இத்தகைய வெளியேற்றமும் காஸாவை முற்றுகையிட்டிருக்கும் செயலும் சட்டரீதியான தற்காலிக வெளியேற்றமாகக் கருதப்படாது. இது பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவே கருதப்படும். எனவே இது அனைத்துலகச் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்றார் அவர்.

வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக்கூடிய குற்றச்செயலாகும்.

இஸ்ரேலிய அதிகாரிகளின் உத்தரவிற்குக் கீழ்ப்படிந்து வீடுகளை விட்டு வெளியேறியோர் சரியான உணவு, உறைவிடம், குடிநீர், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் காஸா எல்லையில் தவிக்கின்றனர் என்று அவர் எடுத்துரைத்தார்.

இவ்வேளையில், காஸாவில் நிவாரண உதவிப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் வழங்குவதற்கு அவசர அனுமதி தேவை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

காஸாவில் நீண்டகால மனிதநேய நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

இஸ்ரேலியத் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பாலஸ்தீனர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

கூடிய விரைவில் காஸாவை அணுகுவதற்கான அனுமதியைப் பெற முயல்வதாக உலகச் சுகாதார நிறுவனம் சொல்லிற்று.

மூன்று நாள்களாக நிவாரணப் பொருள்களுடன் ராஃபா எல்லையில் காத்திருப்பதாகவும் தன் குழுக்களால் அவற்றை விநியோகிக்க இயலவில்லை என்றும் அது கூறியது.

இந்நிலையில், பாலஸ்தீன அகதிகளை எகிப்திற்கோ ஜோர்தானுக்கோ அனுப்ப முயலக்கூடாது என்று ஜோர்தானிய மன்னர் இரண்டாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

இந்த மனிதநேய நெருக்கடி நிலைக்கு காஸா, மேற்குக் கரைக்குள்ளாகவே தீர்வுகாணப்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை அவர் வலியுறுத்தினார்.

ஜெர்மனியின் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் (இடது), ஜோர்தானிய மன்னர் இரண்டாம் அப்துல்லா. படம்: ராய்ட்டர்ஸ்

பெர்லினில் ஜெர்மனியின் பிரதமர் ஒலாஃப் ஷோல்சுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் மன்னர் பேசினார்.

இதற்கிடையே, லெபனானில் இஸ்ரேலிய எல்லைக்கு அருகே ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்தத் துயரச் சம்பவம் குறித்த விசாரணை முடிந்ததும் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.

லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையிலான மோதலில், செய்தியாளர் குழுமீது எறிபடை விழுந்ததால் ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் இஸாம் அப்துல்லா உயிரிழந்தார். மேலும் சில செய்தியாளர்கள் காயமடைந்தனர்.

இவ்வேளையில், திட்டமிடப்பட்ட தரைவழித் தாக்குதலுக்குப் பிறகான காஸாவின் நிலை உலகளாவிய விவகாரமாகத் தலையெடுக்கும் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியிருக்கிறது.

காஸாவில் முழு வீச்சிலான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகிவருகிறது இஸ்ரேலிய ராணுவம். படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்ரேலிய அரசியல்வாதிகள் இதுகுறித்து மற்ற நாடுகளுடன் கலந்துரையாடுவர் என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் கூறினார்.

தரைவழித் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தங்கி அதன் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!