மலாக்கா: மலேசியாவின் மலாக்கா மாநிலம், கோத்தா லக்சமானாவில் முன்னதாக ராட்டினம் அமைந்திருந்த இடத்தில் மனித மண்டையோடும் எலும்பும் கண்டெடுக்கப்பட்டன.
மண்டையோடு எந்தப் பாலினத்தவருடையது உள்ளிட்ட இதர விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மலாக்கா தெங்கா காவல்துறை உதவி ஆணையர் கிறிஸ்தஃபர் பட்டிட் கூறினார்.
“மீன் பிடிப்பவர் ஒருவரால் ஞாயிற்றுக்கிழமை அந்த எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய தடயம் கிடைக்கும்வரை, இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று திரு பட்டிட் செவ்வாய்க்கிழமை கூறினார்.
மண்டையோட்டின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து இருந்ததாக அவர் சொன்னார். அந்த இடத்தில் காற்சட்டை ஒன்றையும் காவல்துறை மீட்டனர்.
மண்டையோட்டில் இருந்து ஏறக்குறைய 5 மீட்டர் தூரத்தில் எலும்பும் கண்டெடுக்கப்பட்டதாக திரு பட்டிட் சொன்னார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, காணாமல்போனவர்கள் குறித்த தகவல்களைக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 62 மீட்டர் உயர ராட்டினம் அகற்றப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக அந்த இடம் பயன்படாமல் கிடந்தது..


