டெல் அவிவ்: இஸ்ரேலைச் சேர்ந்த 65 வயது மாது ஒருவரும் அவருடைய கணவரும் உயிர்பிழைத்ததன் அடையாளச் சின்னமாக கருதப்படுகின்றனர்.
காஸா பகுதி எல்லையிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஒஃபாகிம் எனும் சிற்றூரில் உள்ள தங்கள் வீட்டில் 20 மணி நேரமாக ஹமாஸ் படையினரால் அத்தம்பதி சிறைபிடித்து வைக்கப்பட்டனர்.
அக்டோபர் 7ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் அவர்கள் ஒருவழியாக உயிர்பிழைத்துவிட்டனர். திருவாட்டி ரேச்சல் எட்ரியின் அமைதி மனப்பான்மையும் தம்மை சிறைபிடித்து வைத்தவர்களுக்கு உணவளிக்க அவர் எடுத்த முடிவும் அவர் உயிர்பிழைக்க காரணங்களாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “என் வீட்டிற்கு யார் வந்தாலும், நான் செய்யும் முதல் விஷயம் விருந்தோம்பல்,” என்று குறிப்பிட்டார்.
அக்டோபர் 7ஆம் தேதி அதிகாலைப் பொழுதில் ஆடவர்கள் ஐவர் சன்னல் வழியாக திருவாட்டி எட்ரியின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். அத்தம்பதியிடம் விசாரணை நடத்திய அவர்கள், வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள படுக்கையறைக்குச் செல்லுமாறு உத்தரவிட்டனர்.
அவர்கள் சொன்னபடியே அத்தம்பதியர் செய்தனர். ஆனால், திருவாட்டி எட்ரியோ வீட்டைச் சுற்றி வருவதற்கான வழிமுறைகளைத் தேடினார். இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும், கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை அந்த ஆடவர்களிடம் அவர் முன்வைத்தார்.
அவர்களிடம் சாவகாசமாக உரையாடிய திருவாட்டி எட்ரி, அவர்களின் குடும்பத்தைப் பற்றி விசாரித்ததோடு அவர்களுக்கு குக்கீஸ், தேநீர், காப்பி, கோக்க-கோலா பானம் வழங்கினார்.
சில மணி நேரம் கழித்து அந்தக் கும்பலுக்கு மதிய உணவையும் திருவாட்டி எட்ரி சமைத்துப் பரிமாறினார். “அவர்கள் குதிரைபோல சாப்பிட்டனர்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு செய்து திருவாட்டி எட்ரி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு நட்பை ஏற்படுத்தினார். சிறைபிடித்து வைக்கப்பட்ட அதேவேளையில், வீட்டிற்கு வெளியே இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அந்தக் கும்பல் குறித்து திருவாட்டி எட்ரி சாதுரியமாக தகவல் சொன்னார். அந்த அதிகாரிகளில் அவருடைய மகன் எவியட்டார் எட்ரியும் அடங்குவார்.
நேரமும் சென்றது. “மாலை 4 மணி இருக்கும். அவர்கள் மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று நான் எனக்குள் கூறிக்கொண்டேன். பசியோடு இருக்கும் எவரும் நல்ல மனநிலையுடன் இருக்க மாட்டார்கள். எனவே, என்னை சிறைபிடித்து வைத்தவர்களை திருப்திபடுத்துவது முக்கியம் என உணர்ந்தேன்,” என்றார் திருவாட்டி எட்ரி.
அக்டோபர் 8ஆம் தேதி அதிகாலையில் திருவாட்டி எட்ரியும் அவருடைய கணவரும் மீட்கப்பட்டனர். அவர்களைச் சிறைபிடித்து வைத்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்களில் திருவாட்டி எட்ரியும் ஒருவர். டெல் அவிவ் நகரில் புதன்கிழமை அமெரிக்க அதிபர் பைடனைச் சந்திக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திரு பைடனைச் சந்தித்தவுடன் அவரை திருவாட்டி எட்ரி கட்டியணைத்துக்கொண்டார்.