ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலிய தம்பதியைக் காத்த மலையாளப் பெண்கள்

ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலிய தம்பதியைக் காத்த மலையாளப் பெண்கள்

2 mins read
aaa543b2-ec0e-4b27-88ab-69c60b99042f
கண்ணூர் மாவட்டம், கீழப்பள்ளியைச் சேர்ந்த சபிதா, 39. பாதுகாப்பு அறையின் இரும்புக் கதவு (வலது). - படம்: புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம்

டெல் அவிவ்: இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபிதா பேபி, மீரா மோகனன் இருவரும் இஸ்ரேலில் பராமரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியபோது துணிகரமாகச் செயல்பட்டு, வயது முதிர்ந்த தம்பதியரின் உயிரை அப்பெண்கள் காத்தனர்.

தமக்கு நேர்ந்த அனுபவம் குறித்து சபிதா பேசுவதைக் காட்டும் காணொளி ஒன்றை செவ்வாய்க்கிழமை பகிர்ந்த புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம், சபிதா-மீரா இணையை ‘சூப்பர்வுமன்’ எனப் புகழ்ந்தது.

காஸா எல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் தென் இஸ்ரேலில் உள்ள நிர் ஓஸ் கிப்புட்ஸ் எனும் சிற்றூருக்குள் நுழைந்த ஹமாஸ் போராளிகள், திரு ராம் சுமூலிக், 85, திருவாட்டி ரஹேல், 76, தம்பதியின் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்களுக்குக் காயம் விளைவிப்பதை சபிதா தடுத்தார்.

கண்ணூர் மாவட்டம், கீழப்பள்ளியைச் சேர்ந்த சபிதாவும் கோட்டயம் மாவட்டம், பெருவாவைச் சேர்ந்த மீராவும் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பாதுகாப்பு அறை இரும்புக் கதவைத் திறக்கவிடாமல் பலவந்தமாகக் காத்தனர்.

துப்பாக்கிகள், கனமான பொருள்களைக் கொண்டு ஹமாஸ் போராளிகள் கதவை உடைக்க முற்பட்டபோது அப்பராமரிப்பாளர்கள் அசரவே இல்லை என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைத் தற்காத்த பிறகே அப்பராமரிப்பாளர்கள் பாதுகாப்பு அறையைவிட்டு வெளியேறினர். அந்த நேரம் அவர்களுடைய அண்டைவீட்டார் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் அல்லது பிணை பிடிக்கப்பட்டனர்.

அந்த வயது முதிர்ந்த தம்பதியரின் பிள்ளைகள் அச்சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிடும்வரை, தங்கள் துணிகரச் செயலின் முக்கியத்துவத்தை அந்த இணை உணரவில்லை.

பாதுகாப்பு அறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவம் அதிபயங்கரமானது என்றார் சபிதா, 39.

குறிப்புச் சொற்கள்