கைரோ: முற்றுகையிடப்பட்ட காஸா பகுதிக்குள் உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை இஸ்ரேல் அனுமதிக்கும் என்ற உறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெற்று இரண்டு நாள்கள் ஆகிவிட்டன.
உதவி வழங்கும் குழுக்கள் தங்களின் சரக்கு வாகனங்களில் எல்லையைக் கடக்க முடியும் என்று உறுதியளிக்கப்பட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட தரப்புகள் உதவி தொடர்பிலான ஒவ்வொரு அம்சத்தையும் தொடர்ந்து அலசி ஆராய்ந்துகொண்டிருக்க, காஸா பகுதியில் நெருக்கடி நிலை மோசமடைந்து வருகிறது.
எகிப்து, காஸாவின் எல்லைப் பகுதியில் இருந்தவாறு வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேசியபோது இஸ்ரேல், எகிப்து நாடுகள் உதவி வழங்க இசைந்துள்ளதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், ‘சில நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும்’ உள்ளன என்றும் அவற்றைத் தீர்த்து வைத்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உதவி சென்றடைவது தொடர்பில் முன்னேற்றம் ஏற்படும் சாத்தியம் உண்டு என ஒரு வாரத்திற்கு மேல் கூறப்பட்டு வந்தாலும் சரக்கு வாகனங்கள் நகர்ந்த பாடில்லை.
உதவி வழங்கும் அமைப்புகளும் ஐநாவும் முன்வைத்துள்ள திட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்து வருவதாக ஐநா, ஐரோப்பிய அதிகாரிகளும் அரசதந்திரிகளும் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் நிலவழித் தாக்குதல் மூலம் ஹமாசை வீழ்த்துவதற்குத் தயாராகிவரும் நிலையில், மனிதநேயத் தேவைகள் அதிகரிப்பதுடன் உதவி வழங்கும் வாய்ப்புகளும் குறையும் என்று கூறப்படுகிறது.
“இந்தச் சுவர்களுக்குப் பின்னால், இரண்டு மில்லியன் மக்கள் நீரின்றி, உணவின்றி, மருந்தின்றி, எரிபொருளின்றி, துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி, உயிர்வாழ்வதற்கு அனைத்தும் தேவைப்படும் நிலையில் உள்ளனர். இந்தப் பக்கம், தண்ணீர், எரிபொருள், மருந்துகள், உணவு ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் சரக்கு வாகனங்களை நாங்கள் காண்கிறோம்,” என்று திரு குட்டரஸ் தம் பின்னால் சைகை காட்டியவாறு பேசினார்.
“காஸாவில் மக்கள் பலருக்கும் வாழ்வா, சாவா என்ற வேறுபாட்டைக் காட்டுபவை இந்தச் சரக்கு வாகனங்கள்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, செய்தியாளர்களை வெள்ளிக்கிழமையன்று சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் உதவி தாங்கி நிற்கும் முதல் 20 சரக்கு வாகனங்கள் எல்லையைக் கடந்து செல்லும் என்று குறிப்பிட்டார். அதற்கு முதலில் சிதைந்து கிடக்கும் நெடுஞ்சாலை சீர்செய்யப்பட வேண்டும் என்றார் திரு பைடன்.

