கனடா-இந்தியா அரசதந்திரப் பூசலில் கனடாவை ஆதரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன்

கனடா-இந்தியா அரசதந்திரப் பூசலில் கனடாவை ஆதரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன்

2 mins read
ef634150-cd66-4c88-ad70-c1aa9dbbd2a3
கனடாவில் உள்ள குரு நானக் சீக்கிய குருத்வாராவிற்கு அருகே சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அரசதந்திரப் பூசல் நிலவிவருகிறது.

இதையடுத்து, தனது தூதரக அதிகாரிகள் 41 பேரைக் கனடா மீட்டுக்கொண்டது.

இதுகுறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் வெள்ளிக்கிழமை (அக். 20) கவலை தெரிவித்தன.

இந்தியாவில் கனடிய அரசதந்திரிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும்படி வலியுறுத்த வேண்டாமென புதுடெல்லியை அவை கேட்டுக்கொண்டன.

“இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலுக்கு ஏற்ப கனடியத் தூதரக அதிகாரிகள் புதுடெல்லியிலிருந்து வெளியேறியது கவலை அளிக்கிறது,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மேத்யூ மில்லர் கூறினார்.

ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவிற்குப் பங்கிருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. ஆனால் இந்தியா அதை மறுத்துவருகிறது.

கனடாவின் குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கருதுவதாகக் கூறிய வாஷிங்டன், இக்கொலை வழக்கில் கனடாவுடன் ஒத்துழைக்குமாறு புதுடெல்லியைக் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இவ்விவகாரத்தில் இந்தியாவை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான உறவுகளைச் சேதப்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியாவில் அதன் முக்கியப் போட்டி நாடான சீனாவிற்குப் பதில் இந்தியாவுடன் உறவைப் பேண வாஷிங்டன் விரும்புவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இருப்பினும் வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை, இந்த விவகாரத்தில் நேரடியாக புதுடெல்லியை விமர்சிப்பதுபோல் அமைந்துள்ளது.

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சும் அதேபோன்றதொரு அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

“இந்திய அரசாங்கத்தின் முடிவையடுத்து கனடிய தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை,” என்று அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சில இந்திய நகரங்களில் அமைந்துள்ள கனடிய துணைத் தூதரகங்களில் நேரில் பெறப்படும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கனடா தெரிவித்துள்ளது. விசா நடைமுறைகள் தாமதமாகலாம் என்று அது எச்சரித்தது.

“கருத்து வேற்றுமைகளுக்குத் தீர்வுகாண, அரசதந்திரிகள் அவ்விடத்தில் இருப்பது அவசியம்,” என்று கூறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சு, 1961ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அரசதந்திர உறவுகளுக்கான வியன்னா தீர்மானத்தை இந்தியா மதித்து நடக்கும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டது.

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு, “ஒருதலைப்பட்சமாக அரசந்திரிகளின் பாதுகாப்புக்கான உரிமைகளையும் நடைமுறைகளையும் விலக்கிக்கொள்வது வியன்னா தீர்மானத்திற்குப் புறம்பானது,” என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்