காஸாவுக்குள் மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் வாகனங்கள் சென்றன

இஸ்ரேலின் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் காஸா பகுதிக்குள் சனிக்கிழமை மனிதாபிமான உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் நுழைந்ததாக எகிப்திய அரசாங்க தொலைக்காட்சி தெரிவித்தது.

அந்த வாகனங்கள் ராஃபா வழியாக காஸாவுக்குள் சென்றதாக தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

எகிப்தில் இருந்து காஸாவுக்குள் மனிதாபிமான உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு 20 வாகனங்கள் சனிக்கிழமை செல்லவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வாகனங்களில் உணவுப்பொருள்களும் மருந்துப் பொருள்களும் இருந்ததாக பாலஸ்தீன ஹமாஸ் தரப்பு முன்னதாகக் குறிப்பிட்டு இருந்தது.

மருந்துகளையும் மருத்துவப் பொருள்களையும் வரம்புக்குட்பட்ட டப்பியில் அடைக்கப்பட்ட உணவுப்பொருள்களையும் ஏற்றிக்கொண்டு 20 வாகனங்கள் சனிக்கிழமை காஸா பகுதிக்குள் நுழையவிருந்தன என்று ஹமாஸ் அமைப்பின் ஊடக அலுவலகம் தெரிவித்தது.

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இருந்து எல்லையைக் கடந்து காஸாவுக்குள் செல்வதற்காக அந்த வாகனங்கள் பல நாள்களாக காத்துக் கிடந்ததையும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

இதனிடையே, காஸா-எகிப்து எல்லை சனிக்கிழமை திறக்கப்படக்கூடும் என்று இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்னதாக தெரிவித்தது.

முற்றுகைக்கு உட்பட்டு இருக்கும் காஸா பகுதியில் சிக்கிக்கொண்டிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறுவதற்கான வாய்ப்பும் அந்த எல்லைத் திறப்பு காரணமாக ஏற்படும் என்று நம்பப்பட்டது.

சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ராஃபா எல்லைப் பகுதி திறக்கப்படும் என்று இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்து இருந்தது.

காஸாவில் சிக்கி இருக்கும் வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு வசதியாக அந்த எல்லை எவ்வளவு காலம் திறந்து இருக்கும் என்பது தெரியவில்லை என்றும் தூதரகம் குறிப்பிட்டது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அடுத்த ஓரிரு நாட்களுக்குள் 20 மனிதாபிமான வாகனங்கள் காஸாவுக்குள் செல்லும் என்று அறிவித்து இருந்தார்.

இருந்தாலும் அந்த வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக அந்த எல்லையில் உள்ள நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலை ஹமாஸ் திடீரென அக்டோபர் 7ஆம் தேதி தாக்கியதை அடுத்து ஹமாஸ் அமைப்பைத் துடைத்தொழிக்க காஸா பகுதியில் கடுமையான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல், காஸா பகுதியை முற்றிலும் முடக்கி இருக்கிறது. 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காஸா பகுதியில் மருந்துப் பொருள்கள், குடிநீர், உணவு, மின்சாரம் கூட இல்லாமல் மக்கள் சொல்ல முடியாத அளவுக்குத் தவியாய் தவிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வெள்ளிக்கிழமை எகிப்து-காஸா எல்லைப் பகுதிக்குச் சென்றார்.

அவர், பாலஸ்தீன மக்களுக்குப் பல நாடுகளும் உதவி வழங்க முன்வந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்.

முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் காஸா பகுதிக்குள் மனிதாபிமான உதவிப்பொருள்கள் செல்ல வேண்டும் என்று ஒரு வார காலமாகவே பல தரப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன.

என்றாலும் இது நாள் வரை அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. பல நாள்களாக எல்லையிலேயே மனிதாபிமானப் பொருள்களுடன் வாகனங்கள் காத்துக் கிடந்த நிலையில் சனிக்கிழமை வாகனங்கள் காஸா பகுதிக்குள் சென்றதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, காஸாவுக்கான மனிதாபிமான உணவுப்பொருள்கள் பற்றி கருத்து கூறிய ஐநா அமைப்பு, 20 வாகனங்களில் செல்லும் உதவிப்பொருள்களை பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் பெற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தது.

ராஃபாதான், காஸா பகுதிக்குச் சென்று வருவதற்கான முக்கியமான வழியாக இருக்கிறது. அந்த வழி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இல்லை.

அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க எகிப்தில் இருந்து உதவிப்பொருள்கள் அந்த வழியாக காஸாவுக்குள் செல்ல இஸ்ரேல் இணங்கியது.

காஸா பகுதிக்குள் சிக்கி இருக்கும் மக்களுக்கு அவசரமாக உதவிப்பொருள்கள் தேவைப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 வாகனங்களில் மனிதாபிமான உதவிப்பொருள்கள் காஸாவுக்குள் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது என்று ஐநா அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

வாகனங்கள் காஸா பகுதிக்குள் நுழைந்ததற்கு முன்னதாக ஹமாஸ் அமைப்பு இரண்டு அமெரிக்கர்களை விடுவித்தது.

இவ்வேளையில், மத்திய கிழக்கு நெருக்கடி பற்றி விவாதிக்க அரபு நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய தலைவர்களும் எகிப்தில் கூடி இருக்கிறார்கள்.

ஆனால், அதில் ஈரான், இஸ்ரேல் கலந்துகொள்ளவில்லை என்பதால் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமா என்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!