தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடு திரும்பினார் நவாஸ் ஷெரிஃப்

1 mins read
57b9c2f0-fb94-4def-91d9-60f6f160c27b
இஸ்லாமாபாத் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த பிறகு திரு நவாஸ் ஷரிஃப் சட்ட ஆவணங்களில் கையெழுத்திடும் காட்சி. - படம்: இபிஏ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மூன்றுமுறை பிரதமராகப் பதவி வகித்த திரு நவாஸ் ஷரிஃப், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தாமாகவே நாடு கடந்து பிரிட்டனில் வாழ்ந்து வந்தார்.

73 வயதாகும் அவர், சனிக்கிழமை (அக். 21), சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான அவர், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

பாதுகாப்பு, பொருளியல், அரசியல் நெருக்கடிகளை பாகிஸ்தான் தற்போது எதிர்கொள்கிறது.

திரு நவாஸின் முக்கியப் போட்டியாளரான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத்தண்டனையை நிறைவேற்றிவருகிறார்.

இந்நிலையில், “திரு நவாஸ் நாடு திரும்பியிருப்பது நம்பிக்கை தருகிறது. அவர் தாயகம் திரும்பியது நாட்டின் பொருளியலுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும்,” என்று பிஎம்எல்-என் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கவாஜா முகமது ஆசிஃப் கூறினார்.

திரு நவாஸ் நாடு திரும்பியதைக் கொண்டாடும் விதமாக இன்று (சனிக்கிழமை) பின்னேரத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 7,000க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்ற அவர், மருத்துவ சிகிச்சைக்காக நான்கு வாரப் பிணையில் பிரிட்டன் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை.

அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வாரத் தொடக்கத்தில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் திரு நவாசுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது.

குறிப்புச் சொற்கள்