தென் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்; மேலும் நிவாரண உதவிக்கு அமெரிக்கா உறுதி

2 mins read
60f34740-7b1f-475c-9030-bd7ac07bfc61
எகிப்தில் இருந்து ராஃபா எல்லை வழியாக மனிதாபிமான உதவிப்பொருள்கள், தென் காஸாவுக்குள் உள்ள கான் யூனோஸ் என்ற நகரை சென்றடைந்தன. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

காஸா: மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நீடித்துவரும் நிலையில், தெற்கு காஸா மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை ஆகாயத் தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனர்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்க உதவி செய்யப்போவதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், இஸ்ரேல் தெற்கு காஸா பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு போட்டது.

தெற்கு காஸாவில் இருக்கும் கான் யூனோஸ் என்ற நகரை இஸ்ரேல் தாக்கியதாகவும் அதில் 11 பாலஸ்தீனர்கள் மாண்டதாகவும் பாலஸ்தீன ஊடகம் தெரிவித்தது. இஸ்ரேல் தெற்கு ராஃபா நகரைத் தாக்குவதாகவும் அந்த ஊடகம் கூறியது.

இவ்வேளையில், துருக்கி எல்லை வழியாக காஸாவுக்குள் அனுப்பப்பட்டு ஐநா நிவாரண அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருள்கள் உரிய மக்களுக்குக் கிடைப்பதைத் தாங்கள் உறுதிப்படுத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

பாலஸ்தீளர்களுக்கு உதவிப் பொருள்கள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன் , மேலும் உதவிப் பொருள்கள் காஸாவுக்குச் செல்ல உதவப் போவதாக உறுதி கூறினார்.

இஸ்ரேலுக்குள் அக்டோபர் 7ஆம் தேதி புகுந்து ஹமாஸ் இயக்கம் திடீர் தாக்குதல் நடத்தி 1,400 பேரைக் கொன்றது. அதற்குப் பதிலடியாக காஸாவை இஸ்ரேல் தரைமட்டமாக்கி வருகிறது. காஸாவை முற்றிலும் முடக்கிவிட்டது.

அதனால் காஸாவில் வசிக்கும் 2.3 மில்லியன் மக்கள் உணவு, மருந்து, மின்சாரம் எதுவும் இன்றி தவியாய்த் தவிக்கிறார்கள்.

இதனிடையே, முதன்முதலாக சனிக்கிழமை காஸாவுக்குள் 20 வாகனங்களில் சென்ற மனிதாபிமான உதவிப்பொருள்கள் ஒரு சுற்றுக்குக் கூட போதாது என்று ஐநா நிவாரண அமைப்பு தெரிவித்தது.

காஸாவுக்குள் சனிக்கிழமை 20 வாகனங்களில்தான் அத்தியாவசியப் பொருள்கள் சென்றன. ஆனால் நாள்தோறும் குறைந்தபட்சம் 100 வாகனங்களில் மனிதாபிமானப் பொருள்கள் செல்ல வேண்டும் என ஐநா வலியுறுத்தி வருகிறது.

இவ்வேளையில், காஸாவுக்குள் சனிக்கிழமை வந்த உதவிப் பொருள்களில் எரிபொருள் இல்லையே என்று பாலஸ்தீன அதிகாரிகள் ஏமாற்றம் தெரிவித்தனர்.

பாலஸ்தீன மக்களுக்கு உதவிப்பொருள்கள் போவதை வரவேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன், இஸ்ரேல் கூறியதைப் போலவே அவை ஹமாஸ் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்