தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா தாக்குதல் கடுமையாகும்; இஸ்ரேல் எச்சரிக்கை

2 mins read
70561c64-4a80-458a-8a07-8c89217c58f0
தென் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா எனத் தேடிப் பார்க்கும் பாலஸ்தீனர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: காஸா பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் இன்னமும் வடக்கு காஸாவில் இருக்கும் பாலஸ்தீனர்கள் தெற்கு நோக்கி ஓடிவிட வேண்டும் என்றும் இஸ்ரேல் கடுமையாக எச்சரித்து இருக்கிறது.

அடுத்தக்கட்ட போரில் இஸ்ரேலிய வீரர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கூடுமான வரை குறைப்பதற்காக இஸ்ரேல் அவ்வாறு எச்சரித்து இருக்கிறது என்று இஸ்ரேல் ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடங்கவிருக்கும் அடுத்த கட்ட போர் தரைவழித் தாக்குதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, காஸா மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்தது.

அதேவேளையில் டஜன் கணக்கான பயங்கரவாதிகளைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறியது.

இந்நிலையில், தெற்கு காஸா மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை ஆகாயத் தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனர்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்க உதவி செய்யப்போவதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், இஸ்ரேல் தெற்கு காஸா பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு போட்டது.

தெற்கு காஸாவில் இருக்கும் கான் யூனோஸ் என்ற நகரை இஸ்ரேல் தாக்கியதாகவும் அதில் 11 பாலஸ்தீனர்கள் மாண்டதாகவும் பாலஸ்தீன ஊடகம் முன்னதாகத் தெரிவித்தது.

இஸ்ரேல் தெற்கு ராஃபா நகரைத் தாக்குவதாகவும் அந்த ஊடகம் கூறியது.

இவ்வேளையில், துருக்கி எல்லை வழியாக காஸாவுக்குள் அனுப்பப்பட்டு ஐநா நிவாரண அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருள்கள் உரிய மக்களுக்குக் கிடைப்பதைத் தாங்கள் உறுதிப்படுத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

பாலஸ்தீனர்களுக்கு உதவிப் பொருள்கள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், மேலும் உதவிப் பொருள்கள் காஸாவுக்குச் செல்ல உதவப் போவதாக உறுதி கூறினார்.

இஸ்ரேலுக்குள் அக்டோபர் 7ஆம் தேதி புகுந்து ஹமாஸ் இயக்கம் திடீர் தாக்குதல் நடத்தி 1,400 பேரைக் கொன்றது. அதற்குப் பதிலடியாக காஸாவை இஸ்ரேல் தரைமட்டமாக்கி வருகிறது. காஸாவை முற்றிலும் முடக்கிவிட்டது.

அதனால் காஸாவில் வசிக்கும் 2.3 மில்லியன் மக்கள் உணவு, மருந்து, மின்சாரம் எதுவும் இன்றி தவியாய்த் தவிக்கிறார்கள்.

இதனிடையே, முதன்முதலாக சனிக்கிழமை காஸாவுக்குள் 20 வாகனங்களில் சென்ற மனிதாபிமான உதவிப்பொருள்கள் ஒரு சுற்றுக்குக் கூட போதாது என்று ஐநா நிவாரண அமைப்பு தெரிவித்தது.

காஸாவுக்குள் சனிக்கிழமை 20 வாகனங்களில்தான் அத்தியாவசியப் பொருள்கள் சென்றன. ஆனால் நாள்தோறும் குறைந்தபட்சம் 100 வாகனங்களில் மனிதாபிமானப் பொருள்கள் செல்ல வேண்டும் என ஐநா வலியுறுத்தி வருகிறது.

இவ்வேளையில், காஸாவுக்குள் சனிக்கிழமை வந்த உதவிப் பொருள்களில் எரிபொருள் இல்லையே என்று பாலஸ்தீன அதிகாரிகள் ஏமாற்றம் தெரிவித்தனர்.

பாலஸ்தீன மக்களுக்கு உதவிப்பொருள்கள் போவதை வரவேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன், இஸ்ரேல் கூறியதைப் போலவே அவை ஹமாஸ் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்