மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நடக்கும் போர் வட்டார அளவில் பரவக்கூடிய ஆபத்து ஞாயிற்றுக்கிழமை அதிகமானது.
காஸாவிலும் சிரியா, லெபனானில் ஹமாஸ் ஆதரவாளர்களைக் குறிவைத்தும் இஸ்ரேல் தாக்கிவரும் நிலையில், மத்திய கிழக்கில் ராணுவ பலத்தை அமெரிக்கா அதிகரித்து வருகிறது.
சிரியாவில் இரண்டு விமான நிலையங்களை இஸ்ரேல் முடக்கிவிட்டது. அதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் முன்னதாகத் தெரிவித்தது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து சனிக்கிழமை தனது விமானம் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது.
இந்தத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.
இவ்வேளையில், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் லெபனான் ஈடுபடும் பட்சத்தில் அந்த நாட்டு மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் லெபனானின் காபந்து அரசு பிரதமரை எச்சரித்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இஸ்ரேலைச் சுற்றிலும் உள்ள எல்லைகளில் வன்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்குப் பகுதியில் லெபனான், சிரியாவுக்கு அருகே உள்ள 14 சமூகங்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.
இதனிடையே, தனக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள காஸாவை இடைவிடாமல் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமையும் தாக்கியது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேல் தாக்குதலில் 4,385 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். காஸாவில் வசிக்கும் 2.3 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
இவ்வேளையில், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்க தற்காப்பை அதிகமாக்கவும் மேலும் ராணுவ ஆயுதங்களை அந்தப் பகுதிக்கு அனுப்புவதாக அமெரிக்க தற்காப்புச் செயலாளர் லாய்டு ஆஸ்டின் வாஷிங்டனில் அறிவித்தார்.
அமெரிக்கா ஏற்கெனவே மத்திய கிழக்கில் கணிசமான அளவுக்குக் கடற்படை ஆற்றலை கூட்டி இருக்கிறது.
இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்கள் அங்கு நிலைகொண்டு இருக்கின்றன. சுமார் 2,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மத்திய கிழக்கில் இருக்கிறார்கள்.
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் உள்ள இரண்டு ராணுவத் தளங்களில் சென்ற வாரம் வானூர்தி, எறிபடைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காஸாவைச் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டு இருக்கும் எல்லைப் பகுதிக்கு அருகே கவச வாகனங்களையும் வீரர்களையும் இஸ்ரேல் குவித்து இருக்கிறது.
காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளைத் துடைத்தொழிக்கும் வகையில் அது தரைவழித் தாக்குதலைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது.