கப்பல் மோதிய விவகாரம்; சீனத் தூதரிடம்பிலிப்பீன்ஸ் கடும் கண்டனம்

கப்பல் மோதிய விவகாரம்; சீனத் தூதரிடம்பிலிப்பீன்ஸ் கடும் கண்டனம்

2 mins read
1855a18f-d9f2-494a-8668-76b9695e4342
ஞாயிற்றுக்கிழமை பிலீப்பீன்ஸ் படகை சீனாவின் கடலோரக் காவல் கப்பல் தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்துள்ள பிலிப்பீன்ஸ், மேற்கு பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் சீனாவுக்கு என்ன வேலை என்று கேட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: சீனக் கப்பல்கள், பிலிப்பீன்ஸ் படகுகள் மோதிய விவகாரத்தில் சீனத் தூதரை வரவழைத்து பிலிப்பீன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய நீர் வழிப் பாதையில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று பிலிப்பீன்ஸ் கூறியுள்ளது.

“இந்தச் சம்பவம் மூலம் சரியானவற்றைச் செய்ய தயங்க மாட்டோம் என்பதை எங்களுடைய மக்களும் உலக நாடுகளும் தெரிந்துகொள்ளட்டும். எங்கள் நாட்டு மக்களுக்கு எது நலனோ அதைச் செய்வோம். அனைத்துலகச் சட்டத்திற்கு ஆதரவு அளிப்போம்,” என்று ஆயுதப் படைகளின் பேச்சாளர் கர்னர் மெடெல் அகியூலர் திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, சீனா அதன் ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்த வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் வலியுறுத்தியது.

தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுக்கு பிலிப்பீன்சின் பொருள்களை எடுத்துச் செல்வதை தொடர்ந்து தடுத்து நிறுத்தினால் பேரழிவு ஏற்படும் என்றும் பிலிப்பீன்ஸ் எச்சரித்துள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் ஜோனதன் மாலாய, ஞாயிற்றுக்கிழமை சீனா ஏற்படுத்திய இடையூறால் மணிலாவின் படகுகளில் ஒன்று சேதமடைந்தது என்றார்.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.

ஞாயிற்றுக்கிழமை முற்பகுதியில் நடந்த சம்பவத்தில் தனது கப்பல்களில் ஒன்றுக்கும் பிலிப்பீன்ஸ் படகுகளுக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது என்று சீனாவின் கடலோரக் காவல்படை தெரிவித்தது.

கட்டுமானப் பொருள்கள் போர்க்கப்பல்களுக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதை சட்டரீதியாக தனது காவல்படை தடுத்தது என்றும் சீனா கூறியிருந்தது.

இதற்கு, மேற்கு பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் சீனாவுக்கு என்ன வேலை என்று பிலிப்பீன்ஸ் காட்டமாகக் கேட்டுள்ளது.

“பிலிப்பீன்ஸ் சிப்பந்திகளுக்கு காயம் ஏற்படாததால் நிம்மதி அடைகிறோம். ஆனால் சீனாவின் ஆத்திரமூட்டும் செயலால் கவலை அடைந்துள்ளோம். அதே சமயத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க தயங்கமாட்டோம்,” என்று பிலிப்பீன்ஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்