கோலாலம்பூர்: நிதிப் பிரச்சினை காரணமாக மைஏர்லைன் விமான நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் திடீரென நிறுத்திக்கொண்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர், வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“பங்சாரில் உள்ள தம் வீட்டில் திங்கட்கிழமை அதிகாலை அந்தச் சந்தேக ஆடவர் கைது செய்யப்பட்டார்,” என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ராம்லி முகம்மது யூசோஃப் தெரிவித்தார்.
நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், ஜின்ஜாங் தடுப்புக் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மைஏர்லைன் இணை நிறுவனர் ஆலன் கோவுக்கு விசாரணைக் காவல் திங்கட்கிழமையுடன் முடிவடைந்த வேளையில், அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் திரு யூசோஃப் தெரிவித்தார்.
கோவுடன் அவருடைய 55 வயது மனைவியும் அத்தம்பதியின் 26 வயது மகனும் ஷா ஆலமில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை தடுத்து வைக்கப்பட்டனர்.