காஸா - மத்திய கிழக்கின் காஸா பகுதியில் தரைவழித் தாக்குதலுக்கு முன்னோடியாக இஸ்ரேல் ஆகாயத் தாக்குதலை திங்கட்கிழமை மேற்கொண்டது.
இந்நிலையில், அப்பகுதியில் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்கு தேவையான இடம் குறைந்து வருவதாக ஐநா எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்குப் போர் விரிவடைந்து வருவதற்கு அடையாளமாக இஸ்ரேலியப் போர்விமானங்கள் இரவோடு இரவாக தெற்கு லெபனானைத் தாக்கியதுடன், மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீனியர்களுடனும் போரிட்டதாக அங்கு வசிப்போர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் த கவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, காஸாவிற்கு உதவிப் பொருட்கள் வந்துள்ளபோதிலும், அங்குள்ள மக்களுக்கு தேவைப்படும் உணவு, குடிநீர், மருத்துவப் பொருட்கள், எண்ணெய் போன்றவற்றின் ஒரு சிறு பகுதியே தற்போது உதவியாகஇருப்பதாக ஐநா மனிதநேய அமைப்பு கூறியது.
இம்மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் மேற்கொண்ட தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு 212 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டுவாரத் தாக்குதலில் இதுவரை காஸாவில் குறைந்தது 4,600 பேர் மாண்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள்மதிப்பிடுகின்றனர்.
இஸ்ரேலிய ராணுவம் கடந்த 24 நேரத்தில் தான் காஸாவில் உள்ள 320 இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் திங்களன்று கூறியது. இதில் ஹமாஸ் போராளிகள் தங்கியிருந்த சுரங்கப் பாதைகள், பல தளபத்திய மற்றும் கண்காணிப்பு சாவடிகள் அடக்கம் என்றும் அது விளக்கியது.
அத்துடன், தான் தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் தனது போர்ப் படைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தளங்கள், மற்றும் பீரங்கி கவச வாகன தாக்குதல் தளங்கள் ஆகியவற்றையும்அழித்ததாக அறிக்கை ஒன்றில் கூறியது.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் காஸாவின் மத்திய, வடக்குப் பகுதிகளை குறிவைத்ததாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்தன.

