தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை; அமெரிக்காவுக்கு வாங் யி பயணம்

2 mins read
7b64ff32-27dd-4cd1-af26-6948a84a8c3e
திரு வாங் யியின் பயணத்தில் மத்திய கிழக்கு போர் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சீனாவின் உயர்மட்ட தூதரான வாங் யி இவ்வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட வாங் யியின் பயணம் இடம்பெறுகிறது.

இந்தப் பயணத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போரைக் கட்டுப்படுத்த பெய்ஜிங் உதவும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு.

அக்டோபர் 26 முதல் 28 வரை வாங் யி வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்காவில் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அதிபர் ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உள்ளிட்டோரை அவர் சந்திப்பார் என்று அந்த அதிகாரி கூறினார்.

அதிபர் பைடனை வாங் யி சந்திப்பாரா என்பது குறித்து தெரியவில்லை.

வரும் நவம்பரில் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீனத் தலைவர் ஸி ஜின்பிங்கும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக திரு வாங் யி அமெரிக்காவில் உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், திரு பிளிங்கன் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் பெய்ஜிங் சென்றுள்ள நிலையில் பெய்ஜிங்கிலிருந்து உயர்மட்ட தூதர்களை அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்த்தது. இந்த நிலையில் வாங் யி அமெரிக்காவுக்குச் செல்கிறார்.

திரு வாங் யியுடனான சந்திப்பில் உலகின் இரண்டு பெரிய பொருளியல் நாடுகளுக்கு இடையிலான கடுமையான போட்டி குறித்து பேச வாஷிங்டன் முன்னுரிமை அளிக்கவிருக்கிறது. இருதரப்பு வர்த்தகம், தைவான் பிரச்சினை, தென்சீனக் கடல் விவகாரம் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்