காஸா: மத்திய கிழக்கில் காஸா பகுதியில் அனைத்துலக விதிகள் மீறப்பட்டு உள்ளதாக ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
உடனடியாக போர் நிறுத்தம் நடப்புக்கு வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்டு இஸ்ரேல் கடும் கோபம் அடைந்தது.
ஐநா தலைமைச் செயலாளர் பதவிக்கு குட்டரெஸ் தகுதியானவர் இல்லை என்றும் அவர் உடனே பதவி விலக வேண்டும் என்றும் இஸ்ரேல் கோரியது.
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம், அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலைத் தாக்கியதை அடுத்து ஹமாஸ் ஆதிக்கத்தின் கீழ் உள்ள காஸாவை இஸ்ரேல் இடைவிடாமல் தாக்கி வருகிறது.
இந்த விவகாரம் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் பெரும் பிளவை உருவாக்கி வருகிறது.
இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியது கடுமையான வன்செயல் சம்பவம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் தாக்குவது சரியானதல்ல என்று ஐநா தெரிவித்தது.
காஸாவில் அனைத்துலக சட்டம் தெள்ளத் தெளிவாக மீறப்படுகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது.
எந்த அமைப்பாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அனைத்துலக சட்டம்தான் முக்கியம் என்று இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமல் திரு குட்ரோஸ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பாலஸ்தீனர்கள் 56 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு திணரலில் சிக்கி தவித்து வருகிறார்கள். அதை வைத்துப் பார்க்கையில் ஹமாஸ் தாக்குதல் காரணம் இல்லாமல் நடந்தது அல்ல என்று அவர் தெரிவித்தார்.
ஐநா தலைமைச் செயலாளர் இப்படி கூறியதைக் கேட்டு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலி கோஹன் கடும் கோபம் அடைந்தார்.
அவர் ஐநா தலைமைச் செயலாளரை நோக்கி விரலைக் காட்டி, வரலாற்றிலேயே இல்லாதபடி இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் படுகொடூரமான தாக்குதல் நடத்தியதாக உரக்கக் கூறினார்.
ஐநா தலைமைச் செயலாளரே, எந்த உலகில் நீர் வாழ்கிறீர்? என்று அவர் காட்டமாகக் கேட்டார்.
இதனிடையே, இந்த விவகாரம் பற்றி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், ஐநா தலைமைச் செயலாளர் பதவி வகிக்க திரு குட்ரோஸுக்குத் தகுதி இல்லை என்றும் அவர் பதவி விலகிவிட வேண்டும் என்றும் கூறினார்.
இவ்வேளையில், காஸாவில் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிற்க வேண்டும் அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, கனடா, ரஷ்யா, அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் கோரிக்கை விடுத்தன.
பாலஸ்தீன குடிமக்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருள்கள் சென்று சேர வேண்டும் என்பதே காரணம் என்று அவை கூறின.
காஸாவில் நடக்கும் இஸ்ரேல்- ஹமாஸ் போர் மத்திய கிழக்கில் இதர பகுதிகளுக்கும் விரிவடைந்துவிடாமல் தடுக்க உலகத் தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.
இதனிடையே, போர் நிறுத்தத்திற்கு அனைத்துலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தாலும் காஸாவின் தென்புறத்தில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைத் தீவிரமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை என்றும் தென் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு டஜன் பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாகவும் புதன்கிழமை காஸாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வேளையில், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸாவில் 600,000 மக்கள் இடமாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் அவர்கள் 150 ஐநா முகாம்களில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள் என்றும் அந்த உலக நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
மக்களில் பலரும் தெருவிலேயே தூங்குகிறார்கள். போதிய இடமோ, உதவிப்பொருள்களோ எதுவுமே இல்லை என்று ஐநா அபாய சங்கு ஊதி இருக்கிறது.

