வாஷிங்டன்: உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தது முதல் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்றது.
அதேவேளையில், அந்த விவகாரத்தில் சீனா மூக்கை நுழைக்காமல் விலகி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நெருக்கி வந்தது.
இப்போது மத்திய கிழக்கில் போர் மூண்டுவிட்டதை அடுத்து ரஷ்யாவும் சீனாவும் அதே அணுகுமுறையைக் கையாளுகின்றன.
ரஷ்யா, அனைத்துலக ஒழுங்கை மீறும் நாடு என்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா படம்பிடித்துக் காட்டியது.
அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தை அவ்வளவாகப் பயன்படுத்தாது என்றும் அதிபர் பைடன் உறுதிபட தெரிவித்து இருந்தார்.
ஆனால் சென்ற வாரத்தில் அந்த மன்றத்தில் தாக்கலான ஒரு நகல் மசோதா, தான் ஆதரிக்கும் நாட்டிற்குப் போதுமான ஆதரவாக இல்லை என்று சொல்லி அதை வீட்டோ அதிகாரம் மூலம் அமெரிக்கா ரத்து செய்துவிட்டது.
மத்திய கிழக்கில் ராணுவ படை பலத்தை அதிகமாக்கி அதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை அமெரிக்கா ஊதி விடுகிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.
அதே நேரத்தில் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதையும் இஸ்ரேல் செயல்படும் விதத்தையும் சீனா கண்டித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவும் சீனாவும் இப்படி குறை கூறுவது, அமெரிக்க அதிகாரிகளிடம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அண்மையில் மத்திய கிழக்கிற்குச் சென்றார்.
அதை வைத்து ரஷ்யாவும் சீனாவும் விவேக அரசதந்திர விளையாட்டு விளையாடுவதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு ஆதரவு குரலாக அமெரிக்கா எப்போதுமே இருந்துவருகிறது.
இப்போதைய மத்திய கிழக்கு பிரச்சினையைப் பொறுத்தவரை அமெரிக்காவின் ஐரோப்பிய நேச நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அதிபர் பைடனுடன் சேர்ந்து குரல் கொடுக்கின்றன.
அமெரிக்காவின் அதிபராக பைடன் பொறுப்பு எடுத்துக்கொண்டபோது அவரின் ஒருமித்த கவனம் சீனாவின் மீதுதான் இருந்தது. சீனாவைத்தான் அமெரிக்கா தனது நீண்ட கால சவாலாகக் கருதுகிறது.
இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு திடீரென்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது.
ரஷ்யா, முன்பு மத்திய கிழக்கில் அரபு நாடுகளுக்கு ஆதரவு அளித்த முக்கியமான வல்லரசாக இருந்தது. பிறகு ரஷ்யா, 2015ல் சிரியாவின் அதிபரை ஆதரித்தது.
என்றாலும் இஸ்ரேலுடன்கூடிய உறவையும் ரஷ்ய அதிபர் புட்டின் கட்டிக் காத்துவந்தார். பிறகு 2022 முதல் உலகக் கவனம் எல்லாம் உக்ரேன் பக்கம் திரும்பியது.
இப்போது மத்திய கிழக்கு நிலவரம் தலைதூக்கி இருப்பதால் ரஷ்ய அதிபருக்கு யோகம் அடித்தது போல் நிலவரம் திரும்பி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
பக்கத்தில் உள்ள ஜனநாயக நாட்டை சீர்குலைப்பதில் ரஷ்யாவும் ஹமாஸ் இயக்கமும் ஒன்றுதான் என்று வெள்ளை மாளிகை அலுவலகத்தில் ஆற்றிய உரையில் அதிபர் பைடன் அண்மையில் அந்த இரண்டையும் தொடர்புபடுத்தி பேசி இருந்தார்.
ஆனால் அதை எல்லாம் ரஷ்யா மறுத்துவிட்டது. ஐநா பாதுகாப்பு மன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய ரஷ்யத் தூதர் நெபென்சியா, மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் தேவை என்று உலகமே குரல் கொடுக்கிறது என்றாலும் அமெரிக்கா அதற்குச் செவிசாய்க்க மறுக்கிறது என்று வசைபாடினார்.
மத்திய கிழக்கு நெருக்கடியில் அமெரிக்காவும் சீனாவும் அரசதந்திர ரீதியில் அனுகூலத்தையே எதிர்பார்த்து நடந்து கொள்கின்றன.
தைவானைத் தனது மாநிலமாக சீனா கருதுகிறது. அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தனக்கு அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்ட சீனா விரும்புகிறது.
சீனாவில் வசிக்கும் உய்குர் முஸ்லிம்களை சீனா இனப்படுகொலை செய்வதாக அமெரிக்கா ஆதரவில் இடம்பெறும் குறைகூறல்களை நிராகரிப்பதிலும் மத்திய கிழக்கு அரபு நாடுகளைத் தனக்கு ஆதரவாகத் திருப்ப சீனா விரும்புகிறது.
இருந்தாலும் மத்திய கிழக்கைப் பொறுத்தவரை பொருளியல்தான் சீனாவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மத்திய கிழக்கிலும் வளைகுடா விவகாரத்திவிலும் அமெரிக்கா சிக்கிக் கொண்டால் அது தனக்கு அனுகூலமாக இருக்கும் என்று சீனா நம்புகிறது.

