பெய்ஜிங்: சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடைப்பட்ட பிரச்சினைகளில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
தென்சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்காவுக்குத் தொடர்பு கிடையாது. ஆகையால் சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடைப்பட்ட பிரச்சினைகளில் ஈடுபடும் உரிமை அதற்கு இல்லை என்று வெளியுறவு அமைச்சு பேச்சாளர் திருவாட்டி மா நிங் கூறினார்.
“பிலிப்பீன்சை பாதுகாக்கப் போவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. ஆனால் அந்த உறுதி காரணமாக சீனாவின் இறையாண்மைக்கு ஆபத்து வரக்கூடாது.
“பிலிப்பீன்சின் சட்டவிரோத கடல் பகுதி கோரிக்கைகளுக்கு அமெரிக்கா ஊக்கமூட்டவும் கூடாது,” என்று பேச்சாளர் திருவாட்டி மா தெரிவித்தார்.
“தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடைப்பட்ட தற்காப்பு உறவு அசைக்க முடியாத இரும்புக் கோட்டை போன்றது,” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமருடன் பேச்சு நடத்திய அதிபர் பைடன், பிலிப்பீன்ஸ் நாட்டுக்குச் சொந்தமான படகை, கப்பலை, ஆயுதப்படையைத் தாக்கினால் பிலிப்பீன்ஸ் - அமெரிக்கா தற்காப்பு உடன்பாடு மூலம் அமெரிக்கா செயலில் இறங்கும் என்று எச்சரித்தார்.