பேங்காக்: தாய்லாந்தின் பியூ தாய் கட்சியின் தலைவராக முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ரவின் மகள் திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவத்ர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பேங்காக்கில் வெள்ளிக்கிழமையன்று நடந்த பியூ தாய் கட்சியின் பொதுக் கூட்டத்தின்போது புதிய நிர்வாகக் குழு, திருவாட்டி பேடோங்டார்ன் ஆகியோர் எதிர்ப்பின்றித் தேர்வாயினர்.
கட்சியின் முந்தைய தலைவர் சொல்னன் ஸ்ரீகவ் ஆகஸ்ட் மாத இறுதியில் பதவி விலகியதை அடுத்து இந்தத் தேர்தலுக்கான தேவை எழுந்தது.
தற்போது பிரதமர் ஸ்ரேத்தா தவிசினின் அமைச்சரவையில் திரு சொல்னன் ஸ்ரீகவ் சுகாதார அமைச்சராக இருக்கிறார்.
தக்சினின் மூன்று பிள்ளைகளில் ஆக இளையவரான 37 வயது பேடோங்டார்ன், மிக அண்மையில் அரசியலில் மும்முரமாக இறங்கியுள்ள ஷினவத்ர குடும்ப உறுப்பினராவார்.

