காஸாவில் இதுவரை காணா தாக்குதல்; இஸ்ரேல் தரைப்படைகள் நுழைந்ததைக் காட்டும் காணொளி

4 mins read
897172d0-574e-41f7-9b3b-75bd3642b5f9
தெற்கு காஸா பகுதியில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் அக்டோபர் 26ஆம் தேதி இஸ்ரேல் தாக்கியதில் இடிந்துபோன வீடுகளின் இடிபாடுகளில் இருந்து மாது ஒருவரை பாலஸ்தீனர்கள் மீட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ் 

ஜெருசலம்: இஸ்ரேலிய தற்காப்புப் படைகள் காணொளிகளை வெளியிட்டு உள்ளன.

மத்திய கிழக்கில் போர் நடக்கும் காஸாவுக்குள் இஸ்ரேலிய கவச வாகனங்களும் ராணுவ வாகனங்களும் புகுந்து இருப்பதை அவை காட்டுகின்றன.

ஆனால் அந்தக் காணொளிகள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டவை என்ற விவரங்கள் தெரியவில்லை.

இதனிடையே, இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதாக அந்த நாட்டின் ராணுவம் முன்னதாகத் தெரிவித்தது.

அதேவேளையில், நூற்றுக்கணக்கான விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவில் காஸா மீது குண்டு மழை பெய்ததாகவும் அது குறிப்பிட்டது.

காஸாவின் வடக்குப் பகுதியிலும் காஸா நகர்ப் பகுதியிலும் கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக பிபிசி தெரிவித்தது.

நான்கு இடங்களில் பிரம்மாண்டமான குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் அது கூறியது.

இதுவரை இத்தகைய தாக்குதல்களை தாங்கள் கண்டதில்லை என்று மக்கள் கூறியதாகவும் அது தெரிவித்தது.

இவ்வேளையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியபோது இஸ்ரேலுக்குள் வேலை பார்த்துவந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஊழியர்களின் கதி பற்றி தெரியவில்லை என்றும் அவர்களைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போர் தொடங்கியபோது அந்த ஊழியர்களை இஸ்ரேல் சுற்றி வளைத்து கைது செய்தது.

அவர்களில் சிலர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ராணுவ நிலைகளில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு இருக்கக் கூடும் என்று மனித ஊரிமை அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் நம்பிக்கை தெரிவித்தன.

காஸா பகுதியில் ஹமாஸ் நிலைகளை நோக்கி இஸ்ரேல் ஆகாய வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதலை வெள்ளிக்கிழமை மும்முரப்படுத்தியதாக ராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேலுடன் கூடிய எல்லை அருகே உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகளுடன் தங்கள் போராளிகள் மோதி வருவதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்தது.

அதேவேளையில், உடனடியாக மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் நடப்புக்கு வரவேண்டும் என்று ஐநா பொதுப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.

காஸா பகுதியில் உடனடியாக மனிதாபிமான உதவிகள் முழுமூச்சில் இடம்பெற வேண்டும் என்றும் ஐநா வேண்டுகோள் விடுத்தது.

முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் காஸா பகுதியை இஸ்ரேல் திறந்துவிட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஐநா பொதுப் பேரவைக் கேட்டுக்கொண்டது.

அரபு நாடுகள் தாக்கல் செய்த தீர்மானம் ஒன்றை ஐநா பொதுப் பேரவை ஏகமனதாக நிறைவேற்றியது.

காஸா பகுதியில் இணையக் கைப்பேசிச் சேவைகள் துண்டிக்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பாலஸ்தீன செம்பிறைச் சங்கமும் தெரிவித்தன.

‘‘காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம்,’’ என்று இஸ்ரேலிய ராணுவத்தின் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹாகாரி கூறினார்.

‘‘காஸா பகுதியில் உள்ள சுரங்கங்கள், இதர உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது,’’ என்றும் அவர் தெரிவித்தார்.

விமானத் தாக்குதல் ஒருபுறம் இருக்க, தரைப் படைகளும் தங்களுடைய தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகின்றன என்ற அவர் கூறினார்.

காஸாவுக்குள் தரைவழியாகப் புகுந்து இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று பல நாள்களாக எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தரைவழித் தாக்குதல் தொடங்கி இருக்குமா என்ற ஐயம் இப்போது அதிகமாகி இருக்கிறது.

காஸாவின் வடகிழக்கு நகரமான பெய்ட் ஹானோனிலும் மத்தியில் உள்ள அல்-புரெஜ் பகுதியிலும் இஸ்ரேலிய துருப்புகளுடன் ஹமாஸ் போராளிகள் மோதி வருவதாக அந்தப் பாலஸ்தீன அமைப்பு தெரிவித்தது.

இவ்வேளையில், இஸ்ரேலின் ஆகப் புதிய தாக்குதல் பற்றி கருத்து கூற அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்புத் துறை பேச்சாளர் ஜான் கிர்பி மறுத்துவிட்டார்.

இருந்தாலும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது என்று அவர் கூறினார்.

இதனிடையே, இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவின் ஆலோசகர்களில் ஒருவரான மார்க் ரீகெவ் என்பவர் ஓர் ஒளிபரப்பு நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார்.

‘‘ஹமாஸுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. காஸாவில் இதை ஹமாஸ் உணர்ந்துகொள்ளும்.

‘‘காஸாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ பலமும் அரசியல் பலமும் முடிவுக்கு வரும் வரை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கும். இலக்கு நிறைவேறிய பிறகு காஸா பகுதி மிக வேறுபட்ட ஒரு பகுதியாக இருக்கும்,’’ என்று அவர் கூறினார்.

இஸ்ரேலிய தரைப் படைகள் காஸாவுக்கு வெளியே குவிந்து இருக்கின்றன.

ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7ஆம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 1,400 பேரைக் கொன்றுவிட்டது.

200க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்துச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸாவை கடுமையாகத் தாக்கி வருகிறது. அந்தப் பகுதியை முற்றிலும் முற்றுகையிட்டு இருக்கிறது.

காஸாவில் சுமார் 7,000 பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீனர்கள் உதவிப்பொருள்கள் கிடைக்காமல் படாதபாடு படுகிறார்கள் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

காஸாவில் மனிதாபிமான பேரிடர் ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போரை நிறுத்தும்படி ஐநா கோரிக்கைவிடுத்தாலும் இஸ்ரேல் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்