பெய்ஜிங்: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் இருநாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்காவுடன் ஒத்துழைக்க சீனா தயாராக உள்ளது என்று சீன அதிபர் சீ கூறியதாக அந்நாட்டின் அதிகாரத்துவ ஊடகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா இருநாடுகளின் உறவுகளுக்கான தேசியக் குழு, நியூ யார்க் நகரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இவ்விரு நாடுகள் நல்லுறவுடன் இருப்பதும் இல்லாமல் போவதும் உலகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளைக் களைய ஒன்றிணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது எனவும் அக்குழு நியூ யார்க் நகரில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் வாசிக்கப்பட்ட கடிதத்தில் அதிபர் சீ எழுதியிருந்தார்.
நன்மதிப்பு, அமைதி, இருதரப்புக்கும் நன்மை பயக்கும் போக்கு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இருநாடுகளின் உறவு அமைதல் வேண்டும் என்று அதிபர் சீ அறைகூவல் விடுத்தார். வாஷிங்டனுக்கு சீன வெளியுறவு அமைச்சர் இவ்வாரத்தில் செல்வதற்கு முன்னதாக அதிபர் சீயின் இக்கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. பல நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வியாழக்கிழமை (அக்.26) தொடங்கி சனிக்கிழமை வரை இந்த 3நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டில் (அபெக்) அமெரிக்க அதிபர் ஜோபைடன் சீன அதிபர் சீ ஜின் பிங் இருவரின் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் இருபெரும் பொருளாதாரங்களைக் கொண்ட இவ்விரு நாடுகளுக்கும் பொருளாதாரப் போட்டியுடன், தைவான் சீன உறவு, தென்சீனக் கடல் எல்லைத் தகராறு போன்ற பல பிரச்சினைகளில் வேறுபாடுகள் உள்ளன.