டெல் அவிவ்: ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான இரண்டாம் கட்ட போரை இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது.
அதன் பகுதியாக காஸாவுக்குள் தரை வழியாக நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திவருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்த முயற்சி 50 ஆண்டுகளில் இல்லாத மிக ஆபத்தான ஒன்றாக இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
இஸ்ரேல் விரிவுபடுத்தும் தரைவழித் தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இஸ்ரேலை ஹமாஸ் அக்டோபர் 7ஆம் தேதி திடீரென தாக்கியதை அடுத்து காஸாவை இஸ்ரேல் தரைமட்டமாக்கி வருகிறது.
ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடிமக்கள் மாண்டுவிட்டார்கள். காஸாவுக்குள் வீரர்களையும் கவச வாகனங்களையும் மேலும் அனுப்பி இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று ஐநா உட்பட பல அமைப்புகள் எச்சரித்து இருக்கின்றன.
இஸ்ரேலின் அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக லெபனானிய எல்லைப் பகுதியில் புதிய போர்க்கள நிலை ஒன்றை ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கக் கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. காஸாவுக்குள் புகுந்து தாக்கினாலும் அங்கேயே தொடர்ந்து இருந்துவர இஸ்ரேல் விரும்பாது.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பகுதியை யார் நிர்வகிப்பது, போரால் அழிந்துவிட்ட காஸாவை யார் மீண்டும் கட்டி எழுப்புவது போன்ற பல அம்சங்களையும் இஸ்ரேல் கருத்தில் கொள்ளும் என்று பகுப்பாய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
இஸ்ரேல் தாக்குதலால் காஸா மருத்துவமனைகளும் உணவு விநியோகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுவிட்டன.
பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படுவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் அதிகமாக வெளிவரத் தொடங்கிவிட்டன.
இதனால் தங்கள் நாடுகளில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் தொடங்கக்கூடும் மத்திய கிழக்கு அரபு நாடுகள் கவலைப்படுகின்றன.
ஹமாஸ் இயக்கத்தைத் துடைத்தொழிக்கப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாகு சூளுரைத்து இருக்கிறார்.
இஸ்ரேலிய தாக்குதலில் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். அவர்களில் பாதிப் பேர் சிறார்.
காஸாவில் ஆயிரக்கணக்கான குண்டுகள் போட்டு இஸ்ரேல் தாக்கியதால் ஏற்பட்ட அழிவுகளைக் காட்டும் படங்களைப் பார்த்து பல நாடுகளில் கோபம் மூண்டு இருக்கிறது.
இந்தநிலையில், இஸ்ரேல் காஸா எல்லையில் ஆயிரக்கணக்கான இஸ்ரேல் வீரர்கள் காத்து இருக்கிறார்கள்.
அவர்கள் காஸாவுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதலை நடத்த ஆயத்தமாக இருக்கிறார்கள். அப்படி நடக்கக்கூடிய தாக்குதல் நீண்டகால, சிரமமான ஒன்றாக இருக்கும் என்று திரு நெட்டன்யாகு எச்சரித்து இருக்கிறார்.