2 இலக்குகளுடன் 2ஆம் கட்ட போர்: காஸாவுக்குள் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்

2 இலக்குகளுடன் 2ஆம் கட்ட போர்: காஸாவுக்குள் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்

2 mins read
1f2e07a3-e0b7-43d2-8637-abce044e1ed3
காஸாவுடன் கூடிய தென் இஸ்ரேல் எல்லையில் இருந்து பார்க்கையில், காஸா இப்படி தெரிந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: இஸ்ரேல், காஸாவில் ஹமாஸுக்கு எதிராக தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.

ஹமாஸுக்கு எதிராக இரண்டாம் கட்டப் போர் தொடங்கிவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு அறிவித்தார்.

இஸ்ரேலிய ராணுவத்தினரும் கவச வாகனங்களும் ஹமாஸ் ஆட்சி நடக்கும் காஸா பகுதிக்குள் நுழைந்தன.

அதேவேளையில், இஸ்ரேலியப் போர் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தின. அதில் காஸா பகுதியில் தொலைத் தொடர்ப்பு கிட்டதட்ட முற்றிலும் செயல் இழந்துவிட்டது.இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இதனிடையே, தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேலிய ராணுவத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலியப் பிரதமர், இப்போதைய போர், நீண்டகால, சிரமமான போராக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக இஸ்ரேலிய மக்களிடம் தெரிவித்தார்.

உடனடியான அனைத்து முனைத் தாக்குதல்களையும் நிறுத்தி வைக்கும்படி அமெரிக்க அதிபர் பைடனின் உதவியாளர்களில் சிலர் இஸ்ரேல் தரப்புக்கு ஆலோசனை தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

இஸ்ரேல் இப்போது நடத்தும் தரைவழித் தாக்குதல் வரம்புக்கு உட்பட்ட அளவில்தான் இருக்கிறது என்றாலும், ஹமாஸ் பிணையாகப் பிடித்து வைத்துள்ள 200 பேரை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது என்று பிரதமர் நெட்டன்யாகு கூறினார்.

“இப்போது தொடங்கி இருப்பது போரின் இரண்டாவது கட்டம். இது இரண்டு இலக்குகளுடன் நடக்கிறது.

“ஹமாஸின் அரசியல், ராணுவ பலம் துடைத்து ஒழிக்கப்பட வேண்டும். பிணையாளிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

“இந்த இரண்டும் வெற்றிகரமான முறையில் நடந்தேறும் வரை இஸ்ரேல் ஓயாது,” என்று நெட்டன்யாகு சூளுரைத்தார்.

“இஸ்ரேலின் நடவடிக்கை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. தரைக்கு மேலேயும் கீழேயும் விரோதியைத் துடைத்து ஒழிப்போம்,” என்று திரு நெட்டன்யாகு செய்தியாளர்களிடம் உறுதிபட கூறினார்.

ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலைத் தாக்கியது. அதைஅடுத்து இஸ்ரேல் தாறுமாறாக காஸாவை தாக்கி வருகிறது.

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்று கூறிவரும் அனைத்துலக நாடுகள், இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேர் பலியாகிவிட்டனர். பாலஸ்தீனர்கள் 7,650 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஸாவில் பாலஸ்தீன மக்கள் வரலாறு காணாத அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று ஐநா உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்