கோலாலம்பூர்: மலேசியாவின் ஒரு பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் மாதிரி துப்பாக்கிகளை ஏந்தியதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தருவதற்கான ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் மாதிரி ஆயுதங்களை எந்தியதாகக் கருதப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு அந்நாட்டின் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பெர்னாமா செய்தி நிறுவனம் இந்த விவரங்களை வெளியிட்டது.
வெள்ளிக்கிழமை முதல் இச்சம்பவம் பதிவான படங்களும் காணொளிகளும் இணையத்தில் பகிரப்பட்டு வந்துள்ளன. முழுமையான தகவல்களைக் கொண்ட அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியாவின் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.
பாலஸ்தீன ஒருமைப்பாட்டு வாரத்தில் வன்முறையைச் சித்திரிக்கும் வண்ணம் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்துவோர்மீது நடவடிக்கை எடுக்குமாறு பல கட்சிகள் குரல் கொடுத்தன. அவற்றுக்குத் திருவாட்டி ஃபட்லினா பதிலளித்தார்.
பாலஸ்தீனர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் தற்காக்கவேண்டும் என்பது மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதற்கு ஏற்றவாறு பாலஸ்தீன ஒருமைப்பாட்டு வாரம் எனும் நிகழ்வு, மனித உரிமை, கனிவன்பு ஆகியவற்றின் தொடர்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை வளர்க்கும் என்று மலேசியக் கல்வி அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.
பாலஸ்தீன ஒருமைப்பாட்டு வாரம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை நடைபெறும் என்று அக்டோபர் 21ஆம் தேதியன்று பொதுக் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாலஸ்தீனர்களுக்கு நன்கொடை திரட்டுவது, மனிதாபிமானக் கருத்துகளைக் கொண்ட பாடல்களை ஒலிபரப்புவது போன்ற நடவடிக்கைகள் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு வாரத்தில் இடம்பெறும் என்று கூறப்பட்டது.

