இஸ்‌ரேலியர்களைத் தேடி ரஷ்ய விமான நிலையம் வந்த கும்பல்; 60 பேர் கைது

1 mins read
e1749fda-6402-4a39-8a75-04dee33b3486
‘டெலிகிராம்’ காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இஸ்‌ரேலியர்களையும் யூதர்களையும் தேடி ரஷ்யாவின் மஹாச்காலா விமான நிலையத்திற்குள் அத்துமீறி வந்துள்ள கும்பலைக் காண முடிகிறது. - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: இஸ்‌ரேலிலிருந்து வரும் யூதப் பயணிகளைக் குறிவைத்துத் தாக்க ரஷ்யாவின் டாகேஸ்தான் பகுதியிலுள்ள விமான நிலையத்திற்குள் கும்பல் ஒன்று அத்துமீறி வந்ததாக சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரஷ்யக் காவல்துறையினர் திங்கட்கிழமையன்று தெரிவித்தனர்.

இறைவனை வழிபடும் முழக்கத்துடன் பலர் கதவுகளையும் தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று மஹாச்காலா அனைத்துலக விமான நிலையத்திற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. சிலர் ஓடுபாதையிலும் காணப்பட்டதாக அறியப்படுகிறது.

அமளியைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகளில் ஒன்பது பேருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

இந்த வன்முறைச் சம்பவத்தை அடுத்து ரஷ்யா அதன் மக்களைப் பாதுகாக்குமாறு இஸ்‌ரேல் கோரியது. அத்துடன் அமெரிக்கா சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டது.

இந்த வன்முறை வெடித்துள்ளதற்கு ‘வெளித்தரப்பின் தாக்கம்’ காரணம் என்று ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டது.

டெல் அவிவ்வை விட்டு கிளம்பிய விமானம் ஒன்று மஹாச்காலா விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் இரண்டு மணி நேரத்திற்குப் பின் அது மீண்டும் மாஸ்கோவுக்குக் கிளம்புவதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விமானத்தைப் பற்றி அறிய வந்த கும்பல் இவ்வாறு செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து, வன்முறைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்று டாகேஸ்தானின் ஆளுநர் திரு செர்கே மெலிகோவ் உறுதியளித்துள்ளார்.

தற்போது முழு விமான நிலையமும் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸார‌ஷ்யாவன்முறை