மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: குறைந்தது இருவர் காயம்

1 mins read
d90f52b7-fa14-4412-9a33-7e918570d355
மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவர் பின்னர் அஞ்சல் அலுவலகத்தில் புகுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: இணையம்

தோக்கியோ: மருத்துவமனையில் கைத்துப்பாக்கியைக் கொண்டு சுட்டதாக நம்பப்படும் ஜப்பானிய ஆடவர் ஒருவர், பின்னர் அஞ்சல் அலுவலகத்திற்குள் புகுந்து அங்குள்ள பெண் ஊழியர்களைப் பிடித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜப்பானின் சைத்தாமா மாகாணத்தில் உள்ள டோடா நகரில் செவ்வாய்க்கிழமை பகல் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆடவர் அருகிலுள்ள வாராபி நகருக்குச் சென்றதாகவும் அங்குள்ளோரைத் துப்பாக்கி முனையில் பிணை வைத்திருந்ததாகவும் நம்பப்படுகிறது.

வயது 40களில் அல்லது 50களில் இருப்பதாகக் கூறப்படும் ஆடவர், 1.6 மீட்டர் உயரம் உடையவர் என்று கூறப்படுகிறது. மோட்டார்சைக்கிளில் அவர் தப்பித்ததாகவும் கறுப்புநிற ஆடைகளும் மோட்டார்சைக்கிள் தலைக்கவசமும் அணிந்திருந்ததாகவும் நம்பப்படுகிறது.

டோடா மத்திய பொது மருத்துவமனையில் துப்பாக்கி சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டதாகக் காவல்துறையினர் ஜப்பானின் என்எச்கே தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

காயமடைந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவர் வயது 40களில் உள்ள ஒரு மருத்துவர் என்றும் மற்றொருவர் வயது 60களில் உள்ள ஒரு நோயாளி என்றும் தெரிவிக்கப்பட்டது. இருவர் நிலையும் சீராக இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அருகிலுள்ள 18 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வளாகங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்