காஸா/ஜெருசலம்: காஸாவில் உள்ள ஜபாலியா என்ற ஆகப் பெரிய அகதி முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தபட்சம் 195 பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாக ஹமாஸ் நிர்வாக அரசாங்கம் தெரிவித்தது.
அதேவேளையில், அந்தத் தாக்குதலை போர்க் குற்றம் என்று ஐநா மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் கடுமையாகக் குறைகூறினர்.
காஸாவுக்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதி திறக்கப்பட்டு மேலும் பல வெளிநாட்டினர் காஸாவைவிட்டு வெளியேற ஆயத்தமான நிலையில், அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல், எகிப்து, ஹமாஸ் ஆகிய தரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் விளைவாக புதன்கிழமை அந்த எல்லைப் பகுதி திறக்கப்பட்டது.
அதன் வழியாக வெளிநாட்டினர் 320 பேர் புதன்கிழமை எகிப்திற்குள் சென்றனர்.
அந்த எல்லை வியாழக்கிழமையும் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு வார காலத்தில் சுமார் 7,500 வெளிநாட்டினர் காஸாவைவிட்டு வெளியேறுவார்கள் என்று அரசதந்திர வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்திற்கு ராணுவ பலமோ, அரசியல் பலமோ இருக்கக் கூடாது. இதைச் சாதிக்கும் வரையில் போர் ஓயாது என்று சூளுரைத்து தரை, கடல், ஆகாயம் வழியாக காஸாவை இஸ்ரேல் இடைவிடாமல் தாக்கி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இது நாள் வரை இஸ்ரேல் தாக்குதலில் குறைந்தபட்சம் 8,796 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களில் 3,648 பேர் சிறார் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இவ்வேளையில், காஸா சிட்டியில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் செயல்படும் ஒரு மருத்துவமனையில் அதிகாலை நேரத்தில் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாக பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்தது.
அந்த மருத்துவமனையைவிட்டு எல்லாரும் வெளியேறிவிட வேண்டும் என்று முன்னதாக இஸ்ரேல் எச்சரித்து இருந்தது.
காஸாவின் ஆகப் பெரிய அகதிகள் முகாமில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
ஜபாலியா முகாமில் இஸ்ரேல் நடத்திய இரண்டு தாக்குதலில் 195 பாலஸ்தீனர்கள் மாண்டார்கள். இடிபாடுகளுக்கு இடையில் 120 பேர் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 777 பேர் காயமடைந்து கிடக்கிறார்கள் என்று காஸாவின் ஹமாஸ் ஊடகம் தெரிவித்தது.
இது ஒரு பயங்கரமான படுகொலை என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய ஐநா மனித உரிமை ஆணையர், இஸ்ரேலின் தாறுமாறான தாக்குதல்கள் போர்க் குற்றச் செயலாக வகைப்படுத்தப்படலாம் என்று எக்ஸ் தளத்தில் கூறினார். இது மிகவும் கவலை அளிக்கிறது என்றார் அவர்.
காஸாவுக்குள் புகுந்து தரை வழியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் புதன்கிழமை இஸ்ரேலிய வீரர் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை 15 வீரர்கள் மாண்டனர் என்று இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது.