வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்புகளுக்கும் இடையில் நடக்கும் போர் மனிதாபிமான அடிப்படையில் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்தார்.
அதிபர் பைடன் இயக்க நிதி திரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 200 பேர் முன்னிலையில் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென்று அதிபரை நோக்கி கத்தினார்.
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் தேவை என்று உடனடியாக குரல் கொடுங்கள் என்று அவர் அதிபரை கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்த அதிபர், ஆமாம் போர் நிறுத்தம் தேவை. அதாவது இடைக்காலமாக போரை நிறுத்தி பிணையாளர்களை மீட்பதற்கு காலஅவகாசம் தேவை என்று விளக்கினார்.
இது பற்றி பின்னர் விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை, இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் இயக்கம் 200க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்துச் சென்று வைத்து இருக்கிறது.
அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுதான் அதிபர் அவ்வாறு கூறினார் என்று தெரிவித்தது.
காஸாவில் ஹமாஸ் இயக்கத்திற்கு அரசியல் பலமோ, ராணுவ பலமோ அறவே இருக்கக் கூடாது. இதைச் சாதிக்கும் வரை போர் நிற்காது என்று இஸ்ரேல் சூளுரைத்து இருக்கிறது.
காஸாவில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் படாதபாடு படுகிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, ஹமாஸ் பிடித்து வைத்து இருக்கும் பிணையாளிகளையும் விடுவிக்க வேண்டும். இதற்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் தேவை. இதற்குத்தான் அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது என்று வெள்ளை மாளிகை முன்னதாகவே தெரிவித்து இருந்தது.
மத்திய கிழக்கு பிரச்சினையில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. அதிபர் பைடன் சென்ற மாதம் இஸ்ரேலுக்குச் சென்று வந்தார்.
இருந்தாலும்கூட அண்மைய வாரங்களில் காஸாவில் மனிதாபிமான சூழ்நிலை படுமோசம் அடைவதை அறிந்து பாலஸ்தீன மக்களுக்கு உதவ வேண்டியது அவசியம் என்று அதிபர் வலியுறுத்தத் தொடங்கினார்.