பிள்ளை கொடுமை: தாய் உட்பட இருவருக்குச் சிறை; கண்ணீர் வடித்த நீதிபதி

2 mins read
c4abda0c-40c4-4f68-9288-87faa5a769e2
குற்றவாளியான நுருல் அசியிக்கின் (இடமிருந்து இரண்டாவது). - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: மலேசியாவில் பிள்ளையைத் துன்புறுத்தியதற்காகவும் கவனிக்காமல் இருந்ததற்காகவும் ஓர் ஒற்றைத் தாய்க்கும் அவருடன் இருந்த ஒரு மாதுக்கும் ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்துக்குத் தீர்ப்பளிக்கும்போது நீதிபதி கண்ணீர் வடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

27 வயது நுருல் அசியிக்கின் முகம்மது ஸாகிர், சிங்கப்பூரரான 30 வயது அவீன் சுவா இருவரும் நுருல் அசியிக்கின்னின் ஏழு வயது மகனைத் துன்புறுத்தி கவனிக்காமல் இருந்ததை ஒப்புக்கொண்டனர். அந்தப் பிள்ளை ஒரு மாத காலம் முழுவதும் துன்புறுத்தலை அனுபவித்ததை எண்ணி நீதிபதி விஎம் மேபல் ‌‌ஷீலா தீர்ப்பளிக்கும்போது கண்ணீர் வடித்தார்.

“தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான பந்தம் மிகுந்த தனித்துவம் வாய்ந்தது. தான் இன்னலுக்கு ஆளாவோம் என்று தெரிந்தாலும் நீங்கள் (நுருல் அசியிக்கின்) கேட்டிருந்தால் அவர் உங்களுடன்தான் வர விரும்பியிருப்பார்.

“பொதுமக்கள் தலையிடாதிருந்தால் பிள்ளையின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை நீதிமன்றத்தால் நினைத்துப் பார்க்கமுடியவில்லை,” என்று நீதிபதி கூறினார். அண்டை வீட்டார், பாதிக்கப்பட்ட பிள்ளையை அவரின் தாயின் வீட்டிலிருந்து மீட்டதாக நம்பப்படுகிறது. அச்சம்பவம் பதிவனதாகக் கருதப்படும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டிருக்கிறது.

மருத்துவப் பரிசோதனையில் பாதிக்கப்பட்ட பிள்ளையின் உடலில் 20க்கும் அதிகமான காயங்கள் இருப்பது தெரிய வந்ததாக துணைப் பொது வழக்கறிஞர் டியானா ‌ஸுபீர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று நுருல் அசியிக்கின்னும் அவருடன் வசித்த சுவாவும் முதலில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பாசிர் குடாங்கின் பண்டார் லாயாங்காசா பகுதியில் உள்ள நுருல் அசியிக்கின்னின் வீட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதிவரை பிள்ளையை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தங்களின் கவனிப்பில் இருந்த பிள்ளையைக் கவனிக்காமல் இருக்கும் நோக்கில் நடந்துகொண்டதாகவும் பின்னர் இருவர்மீதும் மேலும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்