லண்டன்: இஸ்ரேலுடன் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு போர் பிரகடனம் செய்யும் சாத்தியம் குறித்து அச்சம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கில் பெரிய அளவிலான பூசலுக்கு இது இட்டுச்செல்லக்கூடும்.
இஸ்ரேலியத் தற்காப்புப் படையினர் மிகுந்த விழிப்புநிலையில் இருந்து வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனானின் தென் எல்லையில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்து வருகிறது.
ஹமாசைப் போன்று ஹிஸ்புல்லாவுக்கும் ஈரானின் ஆதரவு உள்ளது. இஸ்ரேலின் 19 நிலைகளைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தான் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா கூறியதைத் தொடர்ந்து இஸ்ரேல் வியாழக்கிழமை பதில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் வட எல்லையில் தான் மிகுந்த விழிப்புநிலையில் இருப்பதாகக் கூறிய இஸ்ரேலியத் தற்காப்புப் படை, வட்டாரத்தில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தான் பதிலடி தரப்போவதாக எச்சரித்துள்ளது.