விஞ்ஞானிகளே அதிசயிக்கும் உயிரினங்களில் ஒன்று, கடலில் வாழும் நட்சத்திர மீன்கள். அவற்றின் தலைப்பாகத்தை அவர்களால் நீண்டநாளாகக் கண்டறிய முடியவில்லை.
ஒரே மாதிரியாகத் தோன்றும் ஐந்து கைகளுக்குக் கீழே குழாய் அமைப்பில் உள்ள உறுப்புகள் வழி அவை கடல் தரையில் நகர்ந்துச் செல்கின்றன.
ஆயினும், இந்த வகை மீன்களின் கைகளாக தோன்றுபவை உண்மையில் அவற்றின் தலைப் பாகங்கள் என்று அறியப்படுகிறது. அதாவது, ஐந்து கரங்கள் என்று அறியப்பட்டது உண்மையில் உடல் இல்லாத ஐந்து தலைகள் என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் உடலை அவ்வுயிரினங்கள் இழந்துள்ளன. புதன்கிழமை வெளியான பல வரையறைகளை உள்ளடக்கிய ‘நேச்சர்’ எனும் அறிவியல் இதழ் ஒன்றில் இக்கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.
“நட்சத்திர மீன்கள், கடல் தரையில் தவழுகின்ற உடலற்ற தலைகள் என்றுதான் விவரிக்க முடியும்,” என்று ஸ்டான்ஃபோர்ட், கலிஃபோர்னியா பல்கலைக்கழகங்களின் அறிவியல் முனைவர், அறிஞர், தலைமை ஆராய்ச்சி எழுத்தாளர் லோரன்ட் ஃபோர்மலி கூறினார்.
நட்சத்திர மீன்கள் போன்ற கடல் உயிரினங்கள் “எக்கினோடர்ம்ஸ்” என்ற வகையைச் சார்ந்தவை. அதன்படி பொதுவான ஒரு மையப் புள்ளியிலிருந்து ஐந்து பாகங்களாக உறுப்புகள் பிரிந்து அமைந்திருக்கும்.
சில சமயத்தில் அவற்றுக்கு இதயமோ மூளையோ இருப்பதில்லை. இதயம் இல்லாததால் ரத்தமும் இல்லை. கண்களும் இல்லை. நரம்புக் கட்டமைப்பு மட்டுமே அவற்றுக்கு உள்ளன. அவற்றின் வழி அவை ஆழ்க்கடலில் செயலாற்றுகின்றன.

