தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய மாநிலங்களில் கன மழை, திடீர் வெள்ளம்

2 mins read
65c96c72-7827-425a-a90d-8fad1226ad5a
மலேசியாவில் இடைவிடாது பெய்யும் பருவ மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் தீயணைப்புப் படை வீரர்கள். - படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்/ சுபாங் ஜெயா: ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் விளைவாக சில மலேசிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சிலாங்கூரில் கிட்டத்தட்ட 200 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

உள்ளூர் அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது என்று சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் உதவி இயக்குநரான அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தாமான் செமனி இண்டாவில் 14 வீடுகள் 1.5 மீ உயரம் வரை வெள்ளத்தில் மூழ்கியதால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திரு அஹ்மத் முக்லிஸ் கூறினார். எனினும், படிப்படியாக நீர்மட்டம் குறைந்து வந்தது.

சிலாங்கூரில் உள்ள கம்போங் பாங்கி தம்பஹானில் தீயணைப்பு வீரர்கள் நிலைமையை ஆய்வு செய்கிறார்கள்.
சிலாங்கூரில் உள்ள கம்போங் பாங்கி தம்பஹானில் தீயணைப்பு வீரர்கள் நிலைமையை ஆய்வு செய்கிறார்கள். - படம்: பெர்னாமா

கம்போங் பாங்கி லாமாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் ஒன்பது தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சங்காட் ஜாங்கில், பிடோர் ஆற்றில் நீர்மட்டம் குறைந்தாலும் தொடர்ந்து அபாயக் கட்டத்தில் இருப்பதாக வடிகால் நீர்ப்பாசனத்துறை அறிவித்துள்ளது. சாதாரண அளவான 2 மீட்டரைவிட மிக அதிகமாக ​​3.78 மீட்டர் அளவில் தண்ணீர் இருப்பதாக அது கூறியது. வீர் தஞ்சோங் துவாலாங்கில் உள்ள கிந்தா ஆற்றில் அபாய அளவாக 13.16 மீட்டருக்கு தண்ணீர் இருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் சுபாங் ஜெயாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சமூக ஊடகப் படங்கள் சுபாங் கடைத்தொகுதி, சுபாங் ஜெயா கேடிஎம் ரயில் நிலையங்களில் வெள்ளப்பெருக்கைக் காட்டுகின்றன.
கனமழையால் சுபாங் ஜெயாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சமூக ஊடகப் படங்கள் சுபாங் கடைத்தொகுதி, சுபாங் ஜெயா கேடிஎம் ரயில் நிலையங்களில் வெள்ளப்பெருக்கைக் காட்டுகின்றன. - படம்: மலேசிய ஊடகம்

இதற்கிடையே, மழையினால் ஞாயிற்றுக்கிழமை சுபாங் ஜெயா, சுபாங் பரேட் கடைத்தொகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. எனினும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டடத்தின் நிர்வாக நிறுவனம், ஹெக்டேர் பிராப்பர்ட்டி சர்வீஸ் எஸ் டி என் பி ஹெச் டி உறுதிப்படுத்தியது.

அந்நிறுவனம் நிலைமையை தீவிரமாகக் கொள்வதாகவும், வணிகர்கள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அது தெரிவித்தது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்